புதிய நாடாளுமன்றம், இந்திய வரைபடம்
புதிய நாடாளுமன்றம், இந்திய வரைபடம் twitter page
இந்தியா

புதிய நாடாளுமன்றத்திலுள்ள இந்திய மேப்பில் எங்கள் நாட்டின் பகுதிகளா? - நேபாளத்தில் கிளம்பிய எதிர்ப்பு

Prakash J

வளர்ந்து வரும் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், அதிநவீன வசதிகளுடன், 64,500 சதுர மீட்டர் பரப்பளவில், 4 தளங்கள் கொண்ட முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றம், பிரதமர் மோடியால் கடந்த 28ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. ’ஜனநாயக கோயில்’ என்று அழைக்கப்படும் இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடம் ஓவியங்கள், கற்சிலைகள், சுவர் அலங்காரங்கள் என கலை, பாரம்பரிய, பன்முகத்தன்மை அம்சங்களுடன் அமைந்துள்ளது. மேலும், இந்தியாவின் வளத்தையும் கட்டடக் கலையின் சிறப்பையும் எடுத்துரைக்கும் வகையில், பல்வேறு கலை அம்சத்துடன் கூடிய வடிவங்களில் இதில் அமைந்துள்ளதால் இக்கட்டடம் முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது.

இங்குள்ள சுவர் ஓவியங்களில் ‘அகண்ட பாரதம்’ (பிரிக்கப்படாத இந்தியா) வரைபடமும் உள்ளது. இந்த அகண்ட பாரதம் என்ற வரைபடத்தில் நேபாளத்தின் லும்பினி, கபில்வஸ்து ஆகிய பகுதிகள் இந்தியாவில் இணைந்துள்ளதாக வெளியான அறிக்கைகள் மீது நேபாள அரசாங்கத்தின் கவனம் குவிந்துள்ளது. இந்த விவகாரத்தை அரசு கவனத்தில் கொண்டுள்ளது, விரைவில் தீர்வு காணும் என நேபாள நாட்டின் எரிசக்தி, நீர்வளம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சக்தி பகதூர் பாஸ்நெட் விளக்கம் அளித்துள்ளார்.

நேபாளம் நாட்டை எந்த அடிப்படையில் இந்திய வரைபடத்துடன் இணைக்க முடியும்? என நேபாள நாட்டு பிரதமரிடம் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இதனால் சர்ச்சை வெடித்துள்ளது.