இந்தியா

நேபாள விமான விபத்து: பிரிந்த தம்பதியின் ரியூனியன் பயணம் சோகத்தில் முடிந்தது

ச. முத்துகிருஷ்ணன்

நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று மீண்டும் ஒன்றிணைந்த தம்பதியர் தாங்கள் சென்ற முதல் “ரியூனியன்” பயணத்தின்போது நேபாள விமான விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்த தொழிலதிபர் 54 வயதான அசோக் திரிபாதி. இவரது மனைவி வைபவி பந்தேகர் திரிபாதி, தானே நகரின் பல்கம் பகுதியில் உள்ள ருஸ்தோம்ஜி அதீனா அடுக்குமாடி குடியிருப்பில் 22 வயதான அவரது மகன் தனுஷ், 15 வயதான மகள் ரித்திகா ஆகியோருடன் வசித்து வந்தார். கணவரிடம் விவாகரத்து பெற்ற வைபவி மும்பையில் உள்ள பிகேசி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வைபவியின் 80 வயதான தாயும் அவர்களுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் மீண்டும் சந்தித்த அசோக் மற்றும் வைபவ் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். இதைக் கொண்டாடும் விதமாக இருவரும் மகன், மகளுடன் நேபாளத்திற்கு பயணம் மேற்கொண்டனர். நேபாளத்தின் மலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை பொக்காராவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் நால்வரும் பயணம் செய்தனர்.

ஆனால் எதிர்பாராதவிதமாக விமானம் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு ஒன்றிணைந்த தம்பதியர் தங்கள் பிள்ளைகளுடன் இறந்துபோனது இருவரது குடும்பத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அவர்கள் வசித்த குடும்ப வீட்டில் வைபவியின் 80 வயதான தாய் மட்டும் உயிருடன் இருக்கிறார் என அந்த அதிகாரி தெரிவித்தார். ஆனால் அவரும் உடல்நிலை சரியில்லாமல் தற்போது ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதால் உறவினர்கள் விமான விபத்து குறித்து அவரிடம் எதுவும் கூறவில்லை.