கேரளாவில் மாநிலம் முழுவதும் படகுப்போட்டிகள் நடந்தாலும் ஆலப்புழாவின் புன்னமடா ஆற்றில் நடைபெறும் நேரு கோப்பைக்கான படகுப்பந்தயம்தான் பிரதானமானது. இதன் வரலாறு 70 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிடுகிறது. 1952இல் நடந்த படகுப்போட்டிகளை அப்போதைய பிரதமர் நேரு கண்டுகளித்ததுடன் வெற்றியாளர்களுக்கு வெள்ளிக்கோப்பையை பரிசளித்தார்.
போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு படகின் விலை 80 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் எனக்கூறப்படுகிறது. இம்முறை 71 படகுகள் பங்கேற்கின்றன. இதில் 20 படகுகள் பாம்பு வடிவிலானவை. இவற்றின் நீளம் 100 அடிக்கு மேல் இருக்கும். சுமார் 100 பேர் ஒரே நேரத்தில் படகு வலித்துச்செல்வது மெய்சிலிர்க்கும் காட்சி. செண்டை மேளங்களின் முழக்கங்களுடன் கவர்ந்திழுக்கும் மீனவ பாடல் பின்னணியில் படகுப்போட்டியை காண்பதே ஒரு பரவச அனுபவம்.
ஒரு நிமிடத்தில் 100 முதல் 120 முறை மின்னல் வேகத்தில் துடுப்பு வலிக்கவேண்டும் என்பதே போட்டியாளர்களுக்கு தேவைப்படும் அசாத்திய திறமையை வெளிக்காட்டும். ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் பல வகை போட்டிகள் நடைபெறும். விறுவிறுப்பான இப்போட்டிகளை பார்ப்பதற்கென்றே வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் குவிவார்கள்.
இம்முறை போட்டிகளை காண 100 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உள்ளூரில் இருந்து மட்டுமல்ல... வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள். 2 லட்சம் பேர் இப்போட்டிகளை காண குவிய உள்ளனர். நேரு கோப்பை படகுப்போட்டியை கேரள கலாசாரத்தின் ஆன்மாவாகவே கருதி கொண்டாடுகின்றனர் மக்கள்.