மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையில் தற்போது மோதல் நீடித்து வரும் நிலையில், ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த போது நிகழ்ந்த மோதல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
1957ஆம் ஆண்டு அரசுடன் ஏற்பட்ட கருத்து மோதல் முற்றியதை தொடர்ந்து அன்றைய ரிசர்வ் வங்கி ஆளுநர் சர் பெனகல் ராமா ராவ், தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போதைய நிதி அமைச்சர் டிடி கிருஷ்ணமாச்சாரிக்கும் ரிசர்வ் வங்கி ஆளுநர் ராமா ராவுக்கும் இடையே பட்ஜெட் பரிந்துரை தொடர்பாக கருத்து மோதல் ஏற்பட்டது.
அப்போது கிருஷ்ணமாச்சாரிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அதில், 'ரிசர்வ் வங்கி, அரசுக்கு ஆலோசனை கூற வேண்டும், அதே வேளையில் அரசாங்கத்துடன் இணைந்தும் செயலாற்ற வேண்டும்' என தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி தன்னாட்சி அமைப்பாக இருப்பினும் அரசின் வழிகாட்டுதல்கள் படியும் செயல்பட வேண்டும் என நேரு கூறியுள்ளார்.
மத்திய அரசின் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டுடன் ரிசர்வ் வங்கி செயல்பட முடியாது என்பதையும் நேரு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.