இந்தியா

நீட்: பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு; விண்ணப்பிக்க அவகாசம் வழங்க ஆணை..!

நீட்: பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு; விண்ணப்பிக்க அவகாசம் வழங்க ஆணை..!

Rasus

பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேல் உள்ள மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக கால அவகாசத்தை ஒரு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு, பொதுப் பிரிவினருக்கு 25 என்றும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 30 என்றும் கடந்த ஜனவரி மாதம் சிபிஎஸ்இ அறிக்கை வெளியிட்டது.

பொதுப்பிரிவில் தேர்வெழுதுவோருக்கு வயது உச்சவரம்பை தளர்த்த வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் நீட் நுழைவுத் தேர்வை எழுதலாம் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு ஏதுவாக நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை ஒரு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது இடைக்கால உத்தரவு தான் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், வயது வரம்பு தொடர்பான வழக்கின் இறுதித் தீர்ப்பை பொறுத்து இது மாறுபடலாம் என கூறியுள்ளது. வழக்கின் இறுதி விசாரணையானது பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.