இந்தியா

"போலி செய்திகளை கட்டுப்படுத்த விதிமுறைகள் அவசியம்"-உச்சநீதிமன்றம் !

jagadeesh

ஊடகங்களில் போலி செய்திகள் ஒளிபரப்பப்படுவதை தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் டெல்லியில் நடைபெற்ற மத மாநாடு தான் நாட்டில் கொரோனா பரவ காரணம் என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது வேண்டுமென்றே வெறுப்புணர்வை பரப்பும் வகையில் இருப்பதாக கூறி இதை தடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் சில பொதுநல அமைப்புகள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக மத்திய அரசு சமர்ப்பித்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் திருப்தி அளிப்பதாக இல்லை என நீதிபதிகள் கூறினர். மேலும் கேபிள் டிவி சட்டத்தின்கீழ் இத்தகைய போலி செய்திகளை பரப்பக்கூடிய ஊடகங்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்புள்ளது, ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்பதை 3 வார காலத்திற்குள் மத்திய அரசு விரிவாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஊடகங்கள் வெளியிடும் செய்திகளின் விவகாரங்களை ஒழுங்குபடுத்த மத்திய அரசிடம் அதிகாரம் உள்ளது ஆனால் அது கருத்து சுதந்திரம் சார்ந்த விஷயம் என்பதால் மிகவும் கவனத்துடன் கையாள வேண்டியுள்ளது என கூறினார். அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் போலியாக இருக்கும்பட்சத்தில் அது தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு தனியாக விதிமுறைகள் இல்லை என்றால் அதனை புதிதாக உருவாக்குங்கள் என அறிவுறுத்தினார்.