Chandrababu naidu
Chandrababu naidu pt desk
இந்தியா

"17A வின் கீழ் முன் அனுமதி பெற வேண்டுமா?" - சந்திரபாபு நாயுடு வழக்கில் இரண்டு மாறுபட்ட தீர்ப்பு!

webteam

செய்தியாளர்: நிரஞ்சன்

ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது திறன் மேம்பாடு திட்டத்தில் ஊழலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக ஆந்திர அரசு சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு ஆந்திர காவல் துறையினரின் சிஐடி பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். ஜாமீனில் கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி வெளிவந்தார்.

chandrababu naidu

இதற்கிடையே தனக்கு எதிரான வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த மனுவை ஆந்திரா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதைத் தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை வசாரித்த நீதிபதி அனிருத்தா போஸ் ஒரு தீர்ப்பும், நீதிபதி பீலா எம் திரிவேதி மற்றொரு தீர்ப்பும் என இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.

chandrababu naidu

நீதிபதி அனிருத்தா போஸ் தனது தீர்ப்பில், “சந்திரபாபு நாயுடு விவகாரத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13(1) (c), 13 (1) d, 13 (2) ஆகியவற்றின் கீழ் சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க உரிய முன் அனுமதி பெறவில்லை. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியரை விசாரணை செய்ய வேண்டுமென்றால் பிரிவு 17 A இன் கீழ் விசாரணைக்கான முன் அனுமதியை பெற வேண்டும். அத்தகைய ஒப்புதல் இல்லை என்றால் விசாரணை நடவடிக்கை சட்ட விரோதமானது. எனவே சந்திரபாபு நாயுடுவை விசாரிக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி பிலா எம் திரிவேதி வழங்கிய தீர்ப்பில், “நேர்மையற்ற அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சட்டப்பிரிவு 17 A இருக்க முடியாது. அவ்வாறு அதனை பயன்படுத்தினால் நிலுவையில் இருக்கக்கூடிய பல்வேறு வழக்குகளை அது மேலும் தாமதப்படுத்தும். மேலும், பிரிவு 17A-வின் கீழ் முன் அனுமதி பெறுவதை குறையாக கருத முடியாது. ஏனென்றால், இதே விவகாரத்தில் ஐபிசி பிரிவுகளின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.

எனவே அவற்றை ரத்து செய்ய இயலாது. இதனை அடிப்படையாகக் கொண்டு உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த சட்ட விதிமுறை மீறலும் இல்லை. எனவே சந்திரபாபு நாயுடுவின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

supreme court

இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பை வழங்கியுள்ளதால் சட்டப்பிரிவு 17A வின் வரம்புகளை ஆய்வு செய்வதற்காக இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17A வின் கீழ் முன்னனுமதி பெற வேண்டுமா என்ற முக்கியமான கேள்வி எழுந்துள்ளது.