இந்தியா

ரஃபேல் ஒப்பந்தம்: அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ரஃபேல் ஒப்பந்தம்: அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

webteam

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பாக விளக்க அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டி வழக்கறிஞர்கள் எம்.எல். சர்மா, காங்கிரஸ் கட்சியின் தெஹ்சீன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அரசு நாடாளுமன்றத்தில் கூறிய தொகைக்கும் மத்திய அரசு கூறிய தொகைக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதாக மனுதாரர் எம்.எல்.சர்மா தரப்பில் கூறப்பட்டது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலையீடு பெருமளவில் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும் வாதிடப்பட்டது.

இதனை தொடர்ந்து வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் இது தேர்தல் சமயம் என்பதால் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கும், அரசுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறுகளை பரப்புவதாகவும், இந்த வழக்கும் அந்த நோக்கத்தில் தான் தொடரப்பட்டது என்றும் கூறினார். 

மேலும் ''பொதுநல வழக்காக கருதாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி வழக்காக கருத வேண்டும். தேர்தல்களில் அரசுக்கு எதிராக பரப்புரைக்கு பயன்படுத்தும் உத்தியே இந்த வழக்கு. அதனால் இந்த வழக்கையே ஏற்கக் கூடாது. ரஃபேல் ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான விஷயம் என்பதால் நீதிமன்றத்தில் கூற வேண்டிய தேவையில்லை. அரசின் கொள்கை சார்ந்த விஷயங்களை கேட்க நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை. இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் என்பதால் இது சர்வதேச விவகாரம் என்றும் இதனை நீதிமன்ற விசாரிக்க முடியாது'' என்றும் தெரிவித்தார். 

இதனை அடுத்து இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள் அரசு ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக விளக்க அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்