ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்து வருகிறார். எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. 2024 ஆம் ஆண்டி சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக பல்வேறு கூட்டங்களை நடத்தி தன்னுடைய பலத்தை காட்டும் முனையில் தீவிரம் காட்சி வருகிறார். "Quit Jagan, save AP" என்ற முழக்கத்தை அவர் முன்னெட்டு வருகிறார். வரும் ஜனவரி மாதம் சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ் யுவ கலாம் என்ற பெயரில் இளைஞர்களை கவரும் நோக்கில் 4000 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளார்.
"நம் மாநிலம் ஏன் இந்த விதியை எதிர்கொள்கிறது?" என்ற பிரச்சாரத்தை கையிலெடுத்துக் கொண்டு ஆந்திர மாநிலத்தில் யாத்திரை சென்றுவருகிறார் சந்திரபாபு நாயுடு. இந்தப் பேரணியின் ஒருபகுதியாக நெல்லூர் மாவட்டத்தின் கந்துகூர் நகரில் ஒரு கூட்டத்தில் உரையாற்ற திட்டமிட்டிருந்தார். அதன்படி, நேற்று அவர் வருகையையொட்டி பெரிய அளவில் கூட்டம் கந்துகூர் பகுதியில் கூடியது. நேற்று மாலை சந்திரபாபு அப்பகுதிக்கு வந்தார். அவரது வாகனங்கள் வந்த உடனேயே மக்கள் கூட்டம் அவரை நோக்கி முண்டியடித்தது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வைத்திருந்த தடைகளை தாண்டியும் அவர்கள் அவரை நோக்கி நகர்ந்தனர்.
நெரிசல் அதிகரிக்கத் தொடங்கியதும் வடிகால் கால்வாயின் சிமெண்ட் தளம் உடைய அதனுள் பலர் அடுத்தடுத்து விழுந்தனர். இதில் ஒரு பெண் உட்பட மொத்தம் 8 பேர் தங்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார். இந்த விபத்து காரணமாக கூட்டத்தை உடனடியாக ரத்து செய்தார் சந்திரபாபு நாயுடு.
இந்த விபத்து தொடர்பாக இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர், இழப்பீட்டு தொகையையும் அறிவித்தார்.
வருத்தத்தைத் தெரிவித்த சந்திரபாபு நாயுடு:
இந்த விபத்து குறித்து தன்னுடைய ஆழ்ந்த வருத்தங்களை சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அத்துடன், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக அறிவித்ததுடன், அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி செலவையும் ஏற்பதாக தெரிவித்தார்.