இந்தியா

பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தெலுங்கு தேசம் ! - சந்திரபாபு நாயுடு முடிவு

பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தெலுங்கு தேசம் ! - சந்திரபாபு நாயுடு முடிவு

மத்திய பாஜக அரசு கூட்டணியில் இருந்து விலகவுள்ளதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி முடிவெடுத்துள்ளது. மேலும், மத்திய அரசுக்கு எதிரான கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போதையை நாடாளுமன்ற தொடரிலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் கட்சி பேதமின்றி இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் மத்திய அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். மத்திய அரசில் அங்கம் வகித்த தங்களது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய வைத்தார். இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக கடந்த சில நாள்களுக்கு முன்பாக தெரிவித்தார் சந்திரபாபு நாயுடு.

ஒருபுறம், தெலுங்கு தேசம் கட்சி அதிரடியான முயற்சிகளை மேற்கொள்ள, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் தன் பங்கிற்கு ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது. தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களவையில் 16, மாநிலகளவையில் 6 எம்பிக்கள் உள்ளனர்.