நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பது உறுதியான நிலையில், பீகார் தேர்தலில் பாஜகவின் ஆதிக்கம் மிகுந்திருப்பதன் எதிரொலியால், அவரது பதவிக் காலம் 'முழுமை' அடைவது என்பது காலத்தில் கையில்தான் இருக்கிறது.
பீகாரில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களைவிட மூன்று இடங்கள் கூடுதலாகவே பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டணி கைப்பற்றிய மொத்த இடங்கள் 125. மொத்தம் 110 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 74 இடங்களை அள்ளின. 115 தொகுதிகளில் போட்டியிட்ட நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியால் 43 இடங்களையே வசப்படுத்த முடிந்தது.
கடந்த ஆட்சியின்போது நிதிஷ் குமார் வசம் 71 எம்.எல்.ஏ.க்களும், பாஜக வசம் 53 எம்.எல்.ஏக்களும் இருந்தனர். ஆனால், இம்முறை பாஜகவிடமே அதிக எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர்.
இந்தத் தேர்தலுக்கு முன்னரேகூட, தாங்கள் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் வெற்றி பெற்றாலும், நிதிஷ் குமார்தான் முதல்வர் என்று பாஜக உறுதிபட தெரிவித்திருந்தது. ஆனால், எம்.எல்.ஏ.-க்களின் எண்ணிக்கையில் இந்த அளவுக்கு பாஜகவின் ஆதிக்கம் இருக்கும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியே நினைத்திருக்காது.
இந்தப் பின்னணியின் காரணமாக, தற்போது நிதிஷ் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றாலும்கூட, எதிர்காலத்தில் காட்சிகள் மாறவும் வாய்ப்பிருக்கிறது.
தேர்தல் முடிந்த கையோடு, பீகார் மாநில பாஜக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அதில் விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில் பார்க்கும்போது, பீகாரில் அமையவிருக்கும் அமைச்சரவையில் பாஜகவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும் என்பது தெளிவாகியிருக்கிறது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையிலும் பீகாரின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்படுகின்றன. ஆட்சி - நிர்வாகம் குறித்துதான் இந்த ஆலோசனை இருக்கும் என்றும், நிதிஷ்தான் முதல்வர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பீகார் அமைச்சரவையில் முக்கியத் துறைகளை பாஜகவினர் இருப்பார்கள் என்பதும், இனி ஆட்சி சார்ந்த முக்கிய முடிவுகளிலும் அவர்கள் தரப்பின் கைதான் ஓங்கியிருக்கும் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
இதனிடையே, பதவியேற்புக்கு முன்பு தங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நிதிஷ் குமார் ஆலோசனை நடத்தி வருவதும் கவனிக்கத்தக்கது.
இந்தச் சூழல்களை உற்றுநோக்கும்போது, நிதிஷ் குமாரின் முதல்வர் நாற்காலியின் உறுதித் தன்மைக்கு கடைசிவரை பாஜக உறுதியளிப்பது சந்தேகம்தான் என்றும் கருதப்படுகிறது.
கடந்த 2017-ல் நிதிஷ் கட்சியும் பாஜகவும் கைகோத்தன. இதுவரையில் ஆட்சி - நிர்வாகம் சார்ந்த விஷயங்களில் கருத்தொற்றுமைதான் நிலவுகிறது. இனி அது நீடிக்குமா என்பதும் சந்தேகத்துக்குரியதுதான் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் பாஜகவின் அணுகுறையும் காலமும்தான் பதில் சொல்லும்.
பாஜகவுடன் நிதிஷ் கை கோத்ததன் பின்னணி:
பீகாரில் 2015-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மகா கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் மகா கூட்டணி 178 இடங்களைக் கைப்பற்றியது. இதையடுத்து, ஜனதா தளம் சார்பில் நிதிஷ் குமார் முதல்வராகவும், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
2017-ல் இந்தக் கூட்டணியுடன் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு விரிசல் ஏற்பட்டது. தேஜஸ்வி உள்ளிட்டோர் மீது ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து சோதனை மேற்கொண்டதன் எதிரொலியால் கூட்டணி முறிவுக்கு வந்தது. இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றியதால், பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார்.
அதன்பின்னர், நிதிஷுக்கு பாஜக ஆதரவு தந்ததால், அவர் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். துணை முதல்வராக பாஜகவின் சுஷில்குமார் மோடி பதவியேற்றார். 2015 பொதுத் தேர்தலின்போது, பாஜகவை கடுமையாக விமர்சித்த நிதிஷ், அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தது அப்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியது நினைவுகூரத்தக்கது.