கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தே அபார வெற்றி பெற்ற பீகாரின் மொகாமா தொகுதி NDA வேட்பாளர் அனந்த் சிங்கின் வெற்றிதான் பேசுபொருளாக மாறியுள்ளது.
கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தே அபார வெற்றி பெற்ற பீகாரின் மொகாமா தொகுதி NDA வேட்பாளர் அனந்த் சிங்கின் வெற்றிதான் பேசுபொருளாக மாறியுள்ளது. என்ன நடந்தது ? பின்னணி என்ன ? விரிவாகப் பார்க்கலாம். பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் சுமார் 140-க்கும் மேற்பட்ட இடங்களுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் என்று தெரிவித்த நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை பெற்று கிட்டத்தட்ட தாங்கள் ஆட்சியமைப்பதை உறுதிசெய்திருக்கிறது.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாட்னா மாவட்டத்தில் உள்ள மொகாமா சட்டமன்றத் தொகுதியின் முடிவு ஒரு அதிர்ச்சியூட்டும் அரசியல் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு அங்கமான ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) கட்சி வேட்பாளர் அனந்த் குமார் சிங் . அவர் தனது எதிராளியை 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். அனந்த் சிங் பெற்ற வாக்குகள்: 91,416. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் வீணா தேவி 63,210 வாக்குகள் பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வீணா தேவியைவிட கிட்டத்தட்ட 28 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் அனந்த் சிங். இவரது வெற்றி இவ்வளவு பெரிதாகப் பேசப்படக் காரணம் இவர் சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்றதுதான்.
ஆம் குற்றப் பின்னணி கொண்ட 'பாகுபலி' அரசியல்வாதியாக அறியப்படும் அனந்த் சிங், தேர்தல் பிரசாரம் முடிவடைய சில நாட்கள் இருந்தபோது கொலை வழக்கு ஒன்றில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். ஜன சூராஜ் கட்சி ஆதரவாளர் துலார்சந்த் யாதவ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், நவம்பர் 1-2 இரவில் அனந்த் சிங் கைது செய்யப்பட்டார். அனந்த் சிங் நீதிமன்றக் காவலில் (சிறையில்) இருந்தபோதிலும், அவர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.கொலை, ஆட்கடத்தல் உட்படப் பல்வேறு தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள ஒரு வேட்பாளர், சிறையில் இருந்தபடியே 28 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, பீகாரின் தனித்துவமான அரசியல் களத்தைக் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.