பீகார் தேர்தல் pt web
இந்தியா

பீகார் தேர்தல்| NDA கூட்டணியின் வெற்றிக்கு காரணம் என்ன? 4 முக்கியக் காரணிகளின் அலசல் !

பீகார் தேர்தலில் 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கான 4 முக்கிய காரணிகள் குறித்துப் பார்க்கலாம்.

PT WEB

பிகாரில் தேசிய ஜனநாயக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைத்தற்கு சில விஷயங்கள் முக்கிய காரணங்களாக பட்டியலிடப்படுகின்றன. குறிப்பாக, முதல்வர் நிதிஷ் குமாரின் நிர்வாகத் திறனும், தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரமும், சீரான தொகுதிப் பங்கீடும், பெண்கள் வாக்குகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கான காரணங்களாக பார்க்கப்படுகின்றன. இதுகுறித்த நான்கு முக்கிய காரணங்களை விரிவாக பார்க்கலாம்....

நிதிஷ் குமார், பிரதமர் மோடி

பெண்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் பெண்களின் வாக்குகள்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியில் பெண்களின் வாக்குகள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. சட்டம்-ஒழுங்கு மேம்பாடு, கல்வி உதவித்தொகை, கிராமப்புற பெண்களுக்கான ஜீவிகா மகளிர் நலத்திட்டங்கள் மூலம் கிடைத்த பலன்கள் காரணமாக, பெண்களின் வாக்கு கொத்துகொத்தாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிட்டியுள்ளது. அதன்படி, பெண்கள் 50 சதவீதத்திற்கு மேல் வாக்களித்த 25 மாவட்டங்களில் 40 சதவீதத்திற்கு மேலான, வாக்குகள் என்.டி.ஏ கூட்டணிக்கு கிடைத்துள்ளன. மேலும், 14 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய இளம்பெண் வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்தது போன்றவை என்.டி.ஏவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

சமூக வாக்குகளை குறிவைத்த கூட்டணி வியூகம் :

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு மற்றொரு மிக முக்கிய காரணம் அனைத்துச் சமூக வாக்குகளையும் கவரும் வகையில் தேர்தல் கூட்டணி அமைத்தது. அவ்வாறு, பாஜக மூலம் உயர் சாதியினரை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைத்தது, அதே நேரத்தில், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பீகாரின் மக்கள் தொகையில் சுமார் 36% ஆக இருக்கும் குர்மிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே வலுவான வாக்கு வங்கியை கொண்டிருந்தது. கூடுதலாக, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பட்டியல் சமூகம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக வாக்குகளை அதிகரிக்க உதவியது.

சிராக் பாஸ்வான்

சிராக் பஸ்வான்:

குறிப்பாக, சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி பெரும்பாலான பட்டியல் சமூக வாக்குகளை கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்தக் கட்சிக்கு 29 தொகுதிகளை ஒதுக்கியது தேசிய ஜனநாயகக் கூட்டணி. அதிலும், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், அந்தத் தொகுதிகளில் 17 இடங்கள் கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோற்ற தொகுதிகள். அப்படியிருந்தும் தைரியமாகக் களம் கண்டார் சிராக். தொடர்ந்து, தான் போட்டியிட்ட 29 தொகுதிகளில் 19 தொகுதிகளில் வென்றிருக்கிறார் சிராக். கிட்டத்தட்ட மிகப்பெரிய வெற்றி இது.

இவ்வாறு, சமூக வாக்குகளை குறிவைத்த கூட்டணி வியூகமும், கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும்போது அதனை ஒருங்கிணைத்துச் சென்ற விதமும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பீகார் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தந்திருக்கிறது.

மீண்டும் காட்டு ராஜ்ஜியத்தை பேசுபொருளாக்கியது !

பீகார் தேர்தல் பரப்புரைகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் லாலு பிரசாத்- ராப்ரி தேவி ஆட்சிக் காலம் (1990-2005) மற்றும் காட்டு ராஜ்ஜியம் என அழைக்கப்படும் ஆட்சிக்காலத்தை மீண்டும் மீண்டும் மக்களுக்கு நினைவூட்டின. அது பற்றிய பயத்தையும் மக்களிடையே கொண்டு வந்தன.

லாலு பிரசாத்- ராப்ரி தேவி

துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவின் வாகன பேரணியின்போது ஏற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் மூலம் ”காட்டு ராஜ்ஜியம்” என்ற பரப்புரைகளை என்.டி.ஏ கூட்டணியினர் தீவிரப்படுத்தினர். தனது பரப்புரைகளில் ராஷ்ரிய ஜனதா காலத்தில் நடந்த சட்டம்-ஒழுங்கு பயம் மற்றும் வன்முறை காலத்தை பீகார் மக்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டினர். இதன்மூலம், காட்டு ராஜ்ஜியத்திற்கு எதிரான பாதுகாவல்களாக தன்னை முன்னிறுத்திக் கொண்டது தேசிய ஜனநாயகக் கூட்டணி. இது, பெரிதளவில் ராஷ்ரிய ஜனதா தளத்திற்கு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நிதிஷ் எனும் பிம்பம் :

பீகார் மக்களுக்கு நிதிஷ் குமாரின் மீதான ஈர்ப்பு 2025 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வயது மூப்பு மற்றும் நிர்வாக சவால்கள் குறித்த கவலைகள் இருந்தபோதிலும், நிதிஷ் பீகாரின் வெகுஜன மக்களிடம் மிகவும் நம்பகமான அரசியல் நபராகத் தொடர்கிறார், பெரும்பாலும் நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்கு ஒத்ததாகக் கருதப்படுகிறார்.

நிதிஷ் குமார்

”புலி இன்னும் உயிரோடுதான் இருக்கிறது” மற்றும் “பீகாரின் அர்த்தம் நிதிஷ் குமார்” என்று மாநிலத்தில் முழங்கிய முழக்கங்கள், பீகாருக்கு நிதிஷ் குமாரின் அவசியம் பற்றிய எண்ணத்தை வாக்காளர்களிடையே ஏற்படுத்த உதவின. மேலும், பாஜக மற்றும் ஜேடியு இடையேயான சமமான தொகுதிப் பங்கீடு போன்றவை கூட்டணி மீதான நம்பிக்கையையும், நிதிஷின் ஆளுமையையும் வெளிக் கொணர்வதாக இருந்தன. அதன்மூலம், நிதிஷ் என்னும் பிம்பமும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமோக வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்திருகிறது.