ncw, manipur violence
ncw, manipur violence twitter
இந்தியா

மணிப்பூர் சம்பவம்: ஜூன் 12ம் தேதியே அளிக்கப்பட்ட புகார்?..தேசிய மகளிர் ஆணையம் கொடுத்த பகீர் விளக்கம்

Prakash J

மணிப்பூர் வன்முறையின்போது, குக்கி இனப் பெண்கள் இருவர் மெய்டீஸ் சமூக கலவரக்காரர்களால் நிர்வாணமாக, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. மே 4 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் 76 நாட்களுக்கு பிறகு இந்த வீடியோ மூலம் தான் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தேசிய மனித உரிமை ஆணையம் மணிப்பூர் தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட பெண்களின் உடல்நிலை தொடர்பான அறிக்கை, அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் உள்ளிட்டவை தொடர்பான விரிவான அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கும் மணிப்பூர் முதலமைச்சர் பைரோன் சிங்கிற்கும் டெல்லி மகளிர் ஆணையர் ஸ்வாதி மாலிவால் கடிதம் எழுதியுள்ளார்.

மணிப்பூர் கலவரம்

இந்த நிலையில், மணிப்பூர் வீடியோ தொடர்பாக, கடந்த மாதமே வெளிநாட்டு அமைப்பு ஒன்று இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அனுப்பியதாகவும், ஆனால் அந்தப் புகார் மீது எந்தவித நடவடிக்கையும் மகளிர் ஆணையம் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதாவது கடந்த மாதம் 12ஆம் தேதியே இரண்டு ஆர்வலர்கள் மற்றும் வட அமெரிக்க மணிப்பூர் பழங்குடியினர் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் புகாரில் மூன்று பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அந்தப் புகாரில், இரண்டு பெண்களும் நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லப்பட்ட வீடியோ, அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறைக்கு இடையே, தங்களது தீவிரமான மற்றும் உடனடி கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம். குறிப்பாக, மணிப்பூர் மோதலில் மெய்டீஸ் இன கலவரக்காரர்களால் குக்கி - ஜோமி பழங்குடியினப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தீர்க்கவும் கண்டிக்கவும் தங்களுக்கு அவசர வேண்டுகோள் விடுக்கிறோம்” என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், இந்தப் புகாருக்கு மகளிர் குழுவிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தப் புகார் குறித்து கருத்து தெரிவித்துள்ள மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, மணிப்பூர் சம்பவம் குறித்து தங்களுக்கு எந்தப் புகாரும் வரவில்லை என்று மறுத்துள்ளதுடன், அம்மாநில பெண்கள் பிரச்னை தொடர்பாக வேறு சில புகார்கள் தனக்கு வந்தது. அதுகுறித்து மூன்று முறை மணிப்பூர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், நடவடிக்கை எதுவும் மாநில அரசு எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ரேகா சர்மா

இதுகுறித்து அவர், ””மணிப்பூர் அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். ஒன்று அல்ல, நிறைய புகார்கள் வந்தன. அவை மணிப்பூர் மற்றும் இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்தன. எதுவாக இருந்தாலும் அதன் உண்மைத்தன்மையை அறிய வேண்டியிருந்தது. மணிப்பூர் அரசு தான் அதனை தெளிவுபடுத்த வேண்டும். ஒருவேளை அந்த புகார்கள் உண்மை எனில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருந்தாலும் நாங்கள் மணிப்பூர் அதிகாரிகளிடம் புகார் அளித்தோம், அவர்களிடமிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை. மணிப்பூர் வன்கொடுமை தொடர்பாக வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்துள்ளோம்" என்றதுடன், அதிகாரிகளுக்கு தேசிய மகளிர் ஆணையம் எழுதிய கடிதங்களையும் வெளியிட்டார். அந்தக் கடிதங்கள் மே 18, 19 மற்றும் ஜூன் 19 ஆகிய தேதிகளில் எழுதப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.