இந்தியா

மீண்டும் துணை முதல்வரானார் அஜித் பவார்..!

webteam

மகாராஷ்டிர துணை முதலமைச்சராக அஜித் பவார் பொறுப்பேற்றார். முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரேவும் அமைச்சரானார்.

மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்தது. இதையடுத்து பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

இதைத்தொடர்ந்து பெரும்பான்மை இல்லாத நிலையில், இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வரானார்.

இந்நிலையில் உத்தவ் தாக்கரே அமைச்சரவை, 32 நாட்களுக்குப் பிறகு இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் 36 அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.