அஜித் பவார், சரத் பவார் எக்ஸ் தளம்
இந்தியா

மும்பை தேர்தல் | இணையும் பவார்கள்.. ’பவர்’ பெறப்போகும் தேசியவாத காங்கிரஸ்!

மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் ஓர் அதிரடி மாற்றத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு பிரிவுகளும் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதாக துணை முதல்வர் அஜித் பவார் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

Prakash J

அரசியலைப் பொறுத்தவரை தேர்தலின்போது அணிகள் பிரிவதும் இணைவதும் வாடிக்கைதான். அது, மகாராஷ்டிராவிலும் விரைவில் நடக்கவுள்ளது. ஏற்கெனவே மகாராஷ்டிரா மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு நீண்டகாலம் பிரிந்திருந்த சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவும் ராஜ் தாக்கரே வின்நவநிர்மாண் சேனாவும் இணைந்தன. இந்த நிலையில், இன்னொரு அதிசயம் நடக்கவுள்ளது. ஆம், பிரிந்த தேசியவாத காங்கிரஸ் ஒன்றிணைப் போகிறது. ஆளும் ஆளும் மகாயுதியின் கூட்டணியில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்தாலும், எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடியின் ஒரு அங்கமான சரத் பவாஇன் தேசியவாத காங்கிரஸ் (SP) கட்சியும் ஜனவரி 15 ஆம் தேதி புனே மற்றும் பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சி தேர்தலில் கைகோர்த்துள்ளன. அஜித் பவாரும் அவரது தங்கை சுப்ரியா சுலேவும் இணைந்து இதற்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். மேலும், கட்சியில் ஏற்பட்ட பிளவு தற்காலிகமானதுதான் என்றும், குடும்ப உறவுகளும் அரசியல் கொள்கைகளும் காலப்போக்கில் சுமூகமாக சேர வாய்ப்புள்ளதாகவும் அஜித் பவார் குறிப்பிட்டுள்ளார். சரத் பவார் தரப்புடன் மீண்டும் கைகோர்ப்பது குறித்து அஜித் பவார் வெளிப்படையாகப் பேசியிருப்பது, மராட்டிய அரசியலில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதேநேரத்தில் இருவரும் இணையும் பட்சத்தின் பவார்களின் ’பவரால்’ தேசியவாத காங்கிரஸும் பலம் என்று சொல்லப்படுகிறது.

2023ஆம் ஆண்டு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு அஜித் பவாரும் சுப்ரியா சுலேவும் மேடையைப் பகிர்ந்துகொள்வது இதுவே முதல் முறை ஆகும். கடந்த 2023ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த சரத் பவாரின் தம்பி மகனான அஜித் பவார் தனது ஆதரவாளர்கள் பலருடன் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவுடன் இணைந்தார். அதற்கு முன்பு இதே ஏக்நாத் ஷிண்டேவும் தனது ஆதரவாளர்களுடன் உத்தவ் தாக்கரேயிடம் இருந்த சிவசேனாவைப் பிரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.