ncert books x page
இந்தியா

ஆங்கில பாடப்புத்தகங்களில் இந்தி பெயர்.. சர்ச்சையில் சிக்கிய NCERT!

NCERT, ஆங்கிலப் பாடப் புத்தகங்களை இந்தி தலைப்புகளுடன் மறுபெயரிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

இந்தி மொழி திணிப்புக்காக, பாஜக ஆளாத மாநில அரசுகள் மத்திய அரசை எதிர்த்து வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட அரசுகள் மொழிப் பிரச்னைக்காக மத்திய அரசைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. NCERT பாடத்திட்டத்தின்கீழ் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளுக்கு புதிய NCERT பதிப்பு புத்தகங்களில், ஆங்கில வழி பாடப் புத்தகங்களுக்கும் இந்தி தலைப்புகள் வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

book

முந்தைய ஆண்டுகளில் ’ஹனிசக்கிள்’ மற்றும் ’ஹனி கோம்ப்’ என்று பெயரிடப்பட்ட ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் இந்த முறை ’பூர்வி’ என்று பெயரிடப்பட்டுள்ளன. ’பூர்வி’ என்ற இந்தி வார்த்தைக்கு ’கிழக்கு’ என்று பொருள். ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் முறையே ’மிருதங்’ மற்றும் ’சந்தூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளன. கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கலை, உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பற்றிய புத்தகங்கள் முன்னதாக மொழிக்கேற்ப பெயரிடப்பட்டு வந்தன. ஆனால் இந்த முறை, கணிதப் புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் இந்தி பதிப்புகளுக்கு ’கணித பிரகாஷ்’ என்ற இந்தி பெயர் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 6 ஆம் வகுப்பு கணிதப் பாடப்புத்தகம் ஆங்கிலத்தில் கணிதம் என்றும், இந்தியில் கணித் என்றும், உருதுவில் ரியாசி என்றும் அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது, ​​கணித பிரகாஷ் என்று பெயரிடப்பட்டுள்ளன. அதுபோல், 6ஆம் வகுப்புக்கான புதிய அறிவியல் புத்தகம் இப்போது ஆங்கிலத்தில் ’கியூரியாசிட்டி’ என்று அழைக்கப்படுகிறது. இந்தி மற்றும் உருது பதிப்புகள் ’ஜிக்யாசா’ மற்றும் ’தஜாசஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளன. அதேபோல், சமூக அறிவியல் புத்தகம் ஆங்கிலத்தில் ’எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி: இந்தியா அண்ட் பியாண்ட்’ என்றும், இந்தியில் ’சமாஜ் கா அத்யாயன்: பாரத் அவுர் உஸ்கே ஆகே’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. NCERT தனது புதிய ஆங்கில வழிப் பாடப்புத்தகங்களுக்கு இந்தி பெயர்களைச் சூட்டி சர்ச்சையில் சிக்கியிருப்பதுடன் இது விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

book

தேசிய கல்விக் கொள்கை 2020இன்கீழ் NCERT 2023இல் புதிய பாடப்புத்தகங்களை வெளியிடத் தொடங்கியது. முதலில் I மற்றும் II வகுப்புகளுக்கான புத்தகங்களும், அதைத் தொடர்ந்து 2024இல் III மற்றும் VI வகுப்புகளுக்கான புத்தகங்களும் வெளியிடப்பட்டன. IV, V, VII மற்றும் VIII வகுப்புகளுக்கான புதிய புத்தகங்கள் இப்போது வெளியிடப்படுகின்றன.