இந்தியா

நாட்டில் நக்சல் தீவிரவாதம் குறைந்திருக்கிறதா? -மத்திய அரசு தகவல்

ஜா. ஜாக்சன் சிங்

"கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, நாட்டில் நக்சல் தீவிரவாதம் பல மடங்கு குறைந்திருக்கிறது" என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:

நாட்டில் நக்சல் தீவிரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன். நக்சல் தீவிரவாதிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுகிறார்கள். அதே சமயத்தில், திருந்தி வாழ நினைக்கும் நக்சல்களுக்கு நிதியுதவி, வேலைவாய்ப்பும் வழங்கப்படுகின்றன. இதனால், அரசிடம் ஏராளமான நக்சல்கள் சரணடைந்து வருகிறார்கள். கடந்த காலத்தை ஒப்பிடும்போது, நாட்டில் நக்சல் தீவிரவாத செயல்கள் பல மடங்கு குறைந்திருக்கின்றன. குறிப்பாக, கடந்த 2009-ம் ஆண்டு 2,258-ஆக இருந்த நக்சல் தாக்குதல் சம்பவங்கள் 2021-இல் 509-ஆக குறைந்திருக்கிறது.

அதே போல, நக்சல் தாக்குதலில் பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் உயிரிழக்கும் சம்பவங்கள் 2010-ம் ஆண்டில் 1,005-ஆக இருந்தது. இதுவே கடந்த 2021-ம் ஆண்டில் 147-ஆக குறைந்துவிட்டது. மேலும், இந்தியாவில் நக்சல் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்கள் 126-இல் இருந்து கடந்த ஆண்டில் 70-ஆக குறைந்துவிட்டது என அவர் கூறினார்.