Anasuya Seethakka
Anasuya Seethakka file image
இந்தியா

நக்சல் போராளி to அமைச்சர்! பதவியேற்பில் கெத்துகாட்டிய தெலங்கானாவின் இரும்பு பெண் ”சீத்தாக்கா”!

யுவபுருஷ்

தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவியேற்ற நிலையில், 2 எம்.எல்.ஏக்கள் உட்பட மொத்தம் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் நம்பிக்கை நாயகனான மல்லு பட்டி விக்ரமார்கா துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். முதல்வர் பதவியேற்பை தொடர்ந்து, பெண் எம்.எல்.ஏ ஒருவர் பதவியேற்கும்போது ஒட்டுமொத்த அரங்கமே கோஷத்தாலும், கைத்தட்டல்களாலும் அதிர்ந்துள்ளது.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அழைப்புவிடுக்க, எழுந்து வந்து வணக்கம் தெரிவித்த பிறகும் சுமார் ஒருநிமிடத்திற்கு குறையாமல் ஒலித்தது கரகோஷம். ஆம் அவர்பெயர்தான் அனசுயா சீத்தாக்கா. அமைச்சராக பொறுப்பேற்ற இவரது அரசியல் பயணத்தை சுறுக்கமாக பார்க்கும் முயற்சியே இந்த தொகுப்பு.

தெலங்கானா அரசில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சீத்தாக்கா, பட்டியலினச்சமூகத்தைச் சேர்ந்தவர். பிற்காலத்தில் வக்கீலாக உருவெடுத்தவர் தனது 14வயதில் நக்சலைட் குழுவில் சேர்ந்தார். அடுத்தடுத்த காலகட்டங்களில் கல்விதான் முக்கியம் என்று நக்சலைட் குழுவில் இருந்து வெளியேறிய அவர் படிப்பில் கவனம் செலுத்தி வழக்கறிஞரானார். அரசியல் வாழ்க்கையில் சீத்தாக்காவுக்கு தொடக்கம் என்றால் அது தெலுங்கு தேசம் கட்சியில்தான்.

2004ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து, ஒருங்கிணைந்த ஆந்திராவில் முதன்முதலாக முலுக் தொகுதியில் போட்டியிட்ட அவர், தோல்வியை சந்தித்தார். தொடர்ந்து 2009ம் ஆண்டு வெற்றிபெற்ற அவர், 2014ம் ஆண்டு பிஆர்எஸ் வேட்பாளரிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பின் 2017ம் ஆண்டு காங்கிரஸுக்கு வந்த சீத்தாக்கா, களப்பணியால் மிளிர்ந்து மகிளா காங்கிரஸின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து, 2018ல் முலுக் தொகுதியில் நின்று வென்ற அவர், இப்போதைய தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் சுமார் 400 கிராமங்களுக்கு நேரடியாக சென்ற அவர், அரசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்கினார். 'மக்களுக்கான எனது கடமைதான் இது. என்னுடைய திருப்திக்காகத்தான் இதை செய்கிறேன்' என்று நெகிழ்ச்சியுடன் கூறிய சீத்தாக்கா தெலங்கானாவின் இரும்புப்பெண்மணியான கொண்டாடப்படுகிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களில் ஒருத்தியாக இருந்து நல்ல பெயரைப் பெற்று அமைச்சராக மாறியுள்ள சீத்தாக்காவுக்கு அரங்கமே அதிர கட்சியினரும் இன்று வரவேற்பு கொடுத்தது மாநில அரசியலில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த பதவியேற்பு காட்சிகளை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பாகுபலி பட காட்சிகளுடன் ஒப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.

இப்போதும் கல்வி மீது இருந்த ஆர்வத்தில் கடந்த ஆண்டில் பொலிடிக்கல் சையின்ஸ் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்று பலருக்கும் முன் உதாரணமாக திகழ்கிறார் சீத்தாக்கா.