இந்தியா

நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கும் எதிர்க்கட்சிகள் ?

நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கும் எதிர்க்கட்சிகள் ?

webteam

டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் நாளை குடியரசு தலைவரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் பாரதிய ஜனதாவை வீழ்த்த வியூகம் அமைப்பது தொடர்பாக, டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. 

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. அதே வேளையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரும் தொடங்குகிறது. இந்தச் சூழலில் இன்று நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டம் தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இடதுசாரி தலைவர்கள் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், சரத் யாதவ், லாலுவின் மகன் தேஜஸ்வி பிரசாத் ஆகியோரும் டெல்லி கூட்டத்தில் பங்கேற்றனர். 

கூட்டத்திற்குப் பின்னர் பேசிய ராகுல் காந்தி, பாஜகவின் அழுத்தம் காரணமாகவே ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ராஜினாமா செய்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். அரசியலமைப்பில் சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை பாஜகவிடம் இருந்து காப்பாற்றவே தாங்கள் ஒன்றிணைந்துள்ளதாக கூறினார். 

பாஜகவின் ரஃபேல் ஊழல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றுக்கு எதிராக தொடர்ந்து போராட உள்ளதாகவும், மத்திய பாஜக அரசின் போக்கை தடுத்த‌ நிறுத்த செயல்பட உ‌ள்ளதாகவும் கூறினார். எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் இதற்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் ஒன்றிணைந்து செயல்பட முடிவெடுத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நாளை எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. உர்ஜித் படேல் ராஜினாமா தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது முறையிட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.