வடகிழக்கு டெல்லியில் நிகழ்ந்த வன்முறை குறித்து விளக்கம் தருமாறு அம்மாநில காவல்துறைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறைகளுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. வன்முறையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் இன்று இறந்த நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வன்முறையில் காயம் பட்டு டெல்லி GTB மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாநில அமைச்சர் கோபால் ராய் சந்தித்து நலம் விசாரித்தார். இதற்கிடையில் வடகிழக்கு டெல்லி வன்முறை தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 885 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் நிகழ்ந்த வன்முறை குறித்து விளக்கம் தருமாறு அம்மாநில காவல்துறைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் போராட்டத்தை ஒடுக்க காவல்துறை எடுத்த நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளையும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மனித உரிமை ஆணையத்தின் குழு பார்வையிட இருப்பதாக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவும் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது.