டெல்லி அரசின் அதிகாரங்களை மென்மேலும் குறைக்கும் வகையிலும், அதேசமயத்தில் மாநிலத்தின் துணைநிலை ஆளுநரின் அதிகாரங்களை அதிகரிக்கும் வகையிலும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டத் திருத்தத்தை அரவிந்த் கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் எதிர்க்க திட்டமிட்டு வருகிறது. இந்தச் சூழலில், அந்த சட்டத் திருத்தத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் அதிகாரங்களை சிதைப்பது ஜனநாயகப் படுகொலை என்றும், அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாகவும் அவர்கள் 'புதிய தலைமுறை'-க்கு தெரிவித்துள்ளார்கள்.
டெல்லியை போலவே யூனியன் பிரதேச அந்தஸ்தில் உள்ள புதுச்சேரி மாநிலத்திலும் துணைநிலை ஆளுநர் தலையீடு குறித்து தொடர்ந்து புகார்கள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், அடுத்ததாக புதுச்சேரி மாநிலத்தின் அதிகாரங்களும் குறிவைக்க்கப்படுமோ என்ற கவலையும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தேசியத் தலைநகர் பிரதேச டெல்லி திருத்தச் சட்டம் 2021 (National Capital Territory of Delhi (Amendment) Bill, 2021) என்ற இந்த சட்டத் திருத்தம் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து நம்மிடம் அவர் கூறும்போது, "ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களை பறிப்பது கண்டனத்துக்குரிய செயல். இன்று டெல்லிக்கு நடந்திருப்பது நாளை புதுச்சேரிக்கு நடக்கலாம். இந்த சட்டம், நீதிமன்றங்களால் நிராகரிக்கப்படும் என நம்புகிறேன். மக்கள் அதிகாரமே நிலைக்க வேண்டும்" என்றார் வில்சன்.
மாநிலங்களவையில் இந்த சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்கப்பட்டபோதும், வில்சன் தனது கடுமையான எதிர்ப்பை அவையில் பதிவிட்டிருந்தார். பொதுவாக பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படும் பல கட்சிகள் இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன என்பதையும் வில்சன் நினைவுகூர்ந்தார். "மக்களை மிஞ்சி எந்த சக்தியும் கிடையாது. மக்களால் தேர்ந்தேடுக்கபட்டுள்ள அரசின் அதிகாரங்களை சட்டம் மூலம் சிதைப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பது போலாகும்" என்றார் வில்சன்.
காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறும்போது, "புதிய சட்டம் மூலம் டெல்லி மக்களின் உரிமை பறிக்கப்பட்டுபட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி, மதன்லால் குரானா போன்றவர்களும் டெல்லிக்கு மாநில உரிமை வேண்டும் என்று போராடியவர்கள். அதே கட்சியை சேர்ந்த நரேந்திர மோடியும், அமித் ஷாவும் இப்போது டெல்லி அரசுக்கு அதிகாரங்கள் இல்லாமல் ஆக்கியுள்ளார்கள்.
மக்களால் டெல்லி அரசுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களை பறித்து தங்களிடமுள்ள சில அதிகாரிகளிமும் வைத்து கொள்வதுதான் இவர்களது ஆட்சிமுறையாக உள்ளது. காங்கிரஸ் கட்சி இதை வன்மையாக கண்டிக்கிறது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசை கேள்வி கேட்டு இந்த விவகாரத்தை எழுப்பும். புதுச்சேரி மற்றும் டெல்லி மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும். டெல்லி அரசுக்கும் உரிய முறையில் அதிகாரங்கள் அளிக்கப்படும்" என்றார் மாணிக்க தாகூர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், இந்த சட்டத்தை தான் எதிர்ப்பதாக தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் காரணமாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகத்தில் பங்கேற்கவில்லை. ஆகவே, இந்த சட்டத் திருத்தம் அடுத்த கூட்டத்தொடரில் கடும் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் புதிய சட்டத்தை நீதிமன்றங்களிலே எதிர்க்க தயாராகி வருகின்றனர் என்றும், முதலில் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடி, பின்னர் தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை நாடி முறையிட ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றும் அந்த கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய சட்டத்தில் அப்படி என்னதான் பிரச்னை?
புதிய சட்டத்தின்படி டெல்லி அரசு என்பதன் பிரதிநிதி டெல்லியின் துணைநிலை ஆளுநர்தான் என சட்டத்தில் திருத்தம்
செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டத் திருத்தம் துணை நிலை ஆளுநரின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை அரசுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.
டெல்லியைப் பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு, போலீஸ் மற்றும் நிலம் தொடர்பான விவகாரங்களில் துணைநிலை ஆளுநருக்கு இறுதி அதிகாரம் என்பது உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுபட்டுள்ளது. பிற விவகாரங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசின் தலைவரான முதல்வர் தேவையான முடிவுகளை எடுக்க அதிகாரம் உள்ளது என உச் சநீதிமன்றம் இது தொடர்பான வழக்கில் தெரிவித்திருந்ததது.
புதிய சட்டத் திருத்தத்தின் மூலம் டெல்லி சட்டப்பேரவை முடிவுகள் துணைநிலை ஆளுநரின் ஆமோதிப்பை பெறவில்லையென்றால், குடியரசு தலைவர் தலையிடலாம் என சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, டெல்லி அரசின் சட்டப்பேரவைத் தீர்மானங்கள் எதுவும் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாகாது. அதேபோல துணைநிலை ஆளுநரின் முடிவுகளை சட்டப்பேரவை அல்லது சட்டப்பேரவைக் குழுக்கள் மூலம் விசாரிக்க முடியாது எனவும் சொல்லப்பட்டுள்ளது.
துணைநிலை ஆளுநர் ராஜாங்கம்
டெல்லியின் தினசரி நிர்வாகத்துக்காக டெல்லி சட்டப்பேரவை எந்த புதிய விதியையும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் இன்றி உருவாக்க முடியாது என்பது திருத்தப்பட்ட சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், டெல்லி சட்டப்பேரவை தீர்மானங்கள் எதுவும் மக்களவை விதிகளை மீற கூடாது எனவும் சொல்லப்பட்டுள்ளது.
டெல்லியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் ஆனார் நஜீப் ஜங் பதவியில் இருந்தபோது, அவருக்கும் முதல்வர் கேஜ்ரிவாலுக்கும் இடையே பிரச்னைகள் இருந்து வந்தன. பின்னர் அணில் பைஜால் பொறுப்பேற்ற பிறகும் இதே பிரச்னைகள் தொடர்கின்றன. புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் துணைநிலை ஆளுநரான கிரண் பேடி மற்றும் அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோரிடயே தொடர்ந்து முக்கிய முடிவுகள் தொடர்பாக பூசல் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களும் யூனியன் பிரதேச அந்தஸ்தில் இருந்தாலும், தேசிய தலைநகரான டெல்லியை பொறுத்தவரை நிலை சற்று மாறுபடுகிறது. டெல்லியிலே நாடாளுமன்றம், குடியரசு தலைவர் இல்லம், முக்கிய மத்திய அமைச்சகங்கள், முப்படைகளின் முக்கிய அலுவலகங்கள், உளவுத்துறை அலுவலகங்கள், உச்ச நீதிமன்றம், தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் இருந்து வரும் நிலையில், டெல்லியில் சட்டம் - ஒழுங்கு தொடர்பான முடிவுகள் அனைத்தும் மத்திய அரசால் நேரடியாக மேலாண்மை செய்யப்படுகிறது. டெல்லி போலீஸ் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பில் செயல்படுகிறது.
டெல்லியில் நிலத்தின் பயன்பாடு தொடர்பான முடிவுகள் டெல்லி டெவலப்மென்ட் அத்தாரிட்டி என்கிற அமைப்பின் மூலமாக மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கண்காணிப்பில் எடுக்கப்படுகின்றன. அதேபோலவே முக்கிய அதிகாரிகளை இடமாற்றம்
செய்வது போன்ற விஷயங்களிலும் டெல்லியின் துணைநிலை ஆளுநர் ஒத்துழைப்பு இல்லாமல் டெல்லி அரசு முடிவுகளை எடுக்க வாய்ப்பு இல்லை.
ஷீலா தீட்சித் 15 வருடங்கங்கள் டெல்லியின் முதல்வராக இருந்தபோது இதுபோன்ற பிரச்னைகளை தவிர்த்து சாதுர்யமாக மேலாண்மை செய்தார். மத்தியிலும் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்தபொது பிரச்னைகள் இல்லை என்றாலும், மத்தியில்
பா.ஜ.க. ஆட்சி நடைபெற்ற போதும், மோதலை தவிர்த்தார்.
உள்ளதும் போச்சு!
மின்சாரம், சாலை பராமரிப்பு, கல்வி, சுகாதாரம், குடிநீர் விநியோகம், போக்குவரத்து, உணவு விநியோகம், சுற்றுச்சூழல், மது விற்பனை போன்ற பிற துறைகளில் டெல்லி அரசு சுதந்திரமான முடிவுகளை எடுப்பதற்கு அதிகாரம் உள்ளது என்பது இதுவரை இருந்த நிலை. என்றாலும், தற்போது மத்திய அரசு செய்துள்ள சட்டத் திருத்தத்தால், இந்தத் துறைகளிலும் துணைநிலை ஆளுநர் தலையிடக் கூடும் என்கிற அச்சம் எழுந்துள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லாமல் போகும். சட்டப்பேரவை வலுவிழந்தால், அமைச்சரவை மற்றும் முதல்வரும் அதிகாரங்கள் இல்லாமல் துணைநிலை ஆளுநரின் தயவில் செயல்படும் நிலை உருவாகும்.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் போதிய பலம் உள்ளதால், நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற்று பா.ஜ.க. அரசு சட்டத் திருத்தத்தை அமலுக்கு கொண்டுவருகிறது. ஆனால், நீதிமன்றங்களிலும் மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பை தெரிவிக்க ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது. பாரதிய ஜனதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது வரும் காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்டோர் ஓரணியில் திரண்டு மத்திய அரசை எதிர்க்க தயாராகி வருகிறார்கள்.
- கணபதி சுப்பிரமணியம்