விவசாயிகளுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி வரும் 24ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாக பாஜக மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.
அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், 2 ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் 12 கோடி சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கிசான் மஹா அதிவேசன் என்ற இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.75,000 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்த திட்டம் நடப்பு ஆண்டிலிருந்தே அமலுக்கு வரும் எனவும், முதல் தவணை மார்ச் மாதம் வழங்கப்படும் எனவும் வேளாண் அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வரும் 24 ஆம் தேதி கிசான் மஹா அதிவேசன் என்ற விவசாய மாநாட்டில் இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக பாஜக மண்டல துணைத்தலைவர் சத்தியேந்திர சின்ஹா தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அமித் ஷா தொடங்கி வைக்கும் விவசாயிகள் மாநாட்டில் உரை நிகழ்த்தும் பிரதமர் மோடி, விவசாயிகளுக்கான மானியத் தொகையில் முதல்தவனையான 2000 ரூபாயை வங்கியில் செலுத்தி இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாக சின்ஹா தெரிவித்தார்.
இதற்காக கோரக்பூர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள 7000 விவசாயிகள் இந்த பயனை பெறுவர் எனவும் அனைவரையும் ஒருங்கிணைக்க சிறப்பு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படும் எனவும் சின்ஹா குறிப்பிட்டார்.