இந்தியா

‘காந்தியும், மோடியும் இந்தியாவின் 2 தேசத்தந்தைகள்’ - பட்னாவிஸ் மனைவியின் ’ஷாக்’ கருத்து

webteam

நாட்டிற்கு இரண்டு தேசத் தந்தைகள் இருக்கின்றனர் என்றும், இதில் இரண்டாவது பட்டம் பிரதமர் நரேந்திர மோடியைச் சேரும் என மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி கருத்து தெரிவித்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா, நமது நாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்தி என்றும், புதிய இந்தியாவின் தேசத் தந்தை பிரதமர் நரேந்திர மோடி என்றும், மொத்தத்தில் இந்தியாவிற்கு இரண்டு தேச தந்தைகள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவர் நமக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவர், மற்றொருவர் நம் சமகாலத்தில் வாழக்கூடியவர் என அவர் பேசினார்.

இதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய வாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். அம்ருதா தொடர்ந்து அரசியல் ரீதியிலான கருத்துக்களை தெரிவித்து வருபவராகவும், ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியை தேசத்தந்தை என்றும் அழைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.