இந்தியா

தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்கக் கூடாது: காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்

தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்கக் கூடாது: காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்

webteam

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்கும் தார்மீக உரிமை காங்கிரசுக்கு இல்லை என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். 

குஜராத்தின் வதோதராவில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், அரசியல் சட்ட அமைப்பான தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்க காங்கிரசுக்கு தார்மீக உரிமை இல்லை என்று பேசினார். தீபாவளிக்குப் பிறகு குஜராத்துக்கு மோடி ஏன் வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கவலை கொண்டதாகக் கூறிய பிரதமர், எனக்கு எதிராக புகார் ஏதும் கூற முடியாததால் தேர்தல் ஆணையத்தை குறிவைத்து அவர்கள் தாக்குவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, தாகெஜ் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, முக்கியமான பொருளாதார சீர்திருத்த முடிவுகளை மத்திய அரசு தொடர்ந்து எடுக்கும் என்றும் தெரிவித்தார். இதுவரை எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள், கடுமையான முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் சரியான பாதைக்கு திரும்பியிருப்பதாகவும் மோடி பெருமிதம் தெரிவித்தார். 

குஜராத்தில் பயணம் மேற்கொண்ட பிரதமர், கோகா மற்றும் தாகெஜ் இடையே படகுப் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். பிறகு, படகில் அவர் பயணம் மேற்கொண்டார். ரோல் ஆன், ரோல் ஆஃப் என்பதன் சுருக்கமாக ரோ ரோ என்ற பெயரிலான இந்த படகு சேவையால் 350 கிலோ மீட்டர் பயண தூரம், 31 கிலோ மீட்டராகக் குறைகிறது. கம்பத் வளைகுடா பகுதியின் ஒருபுறமான கோகோவில் இருந்து மறுபுறமான தாகெஜ்ஜுக்கு செல்வதற்கு சாலை மார்க்கமாக 350 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. படகு போக்குவரத்தால் பவநகரில் இருந்து சூரத் நகருக்கும் பயண தூரம், நேரம் குறையவுள்ளது.