தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சி பகல் கனவு என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
5 மாநில தேர்தலில் பாஜகவை வெற்றி கண்ட காங்கிரஸ் நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அரசை எதிர்கொள்ள மெகா கூட்டணியை அமைத்து வருகிறது.
இதனிடையே பாஜகவிலும் காங்கிரஸிலும் சேராமல் மூன்றாம் அணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் முயன்று வருகிறார். இதற்காக சில மாதங்களுக்கு முன்பு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். ஆனால் திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது.
மூன்றாம் அணியை உருவாக்க 4 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆதரவு கோரினார். தொடர்ந்து மேற்குவங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை, சந்திரசேகர் ராவ் சந்தித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மேகதாது பொறுத்தவரை தமிழகம், கேரளம், புதுவை மாநில அரசுகளை கேட்காமல் தன்னிச்சையாக அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு யாரையும் ஆலோசிக்காமல் கர்நாடகம் வரைபடம் தயாரிக்க அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு மத்திய நீர்வள அமைச்சர் நிதின் கட்கரியிடம் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதனை மறுபரிசீலனை செய்யவும் கோரினேன்.
மேகதாது அணையால் தமிழக மற்றும் காரைக்கால் விவசாயிகள் பாதிப்படைவர். ஜி.எஸ்.டி வரியை தாறுமாராக பாஜக உயர்த்தி வந்தனர். தற்போது அவை குறைக்கப்பட்டுள்ளது. எந்தவித திட்டமும் இல்லாமல் ஜி.எஸ்.டி வரி முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. சிங்கப்பூர், மலேசியாவில் எல்லா பொருட்களுக்கும் 7%தான் வரி விதிக்கப்படுகிறது.
ஆனால் இந்தியாவில் 54%வரை வரி வசூல் செய்யப்படுகிறது; 12% இருந்த சிமெண்டுக்கு 28% வரி விதிக்கப்படுகிறது. 5 மாநில தேர்தல் தோல்வியின் தாக்கமே 31 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டது. மூன்றாவது அணி அமைக்க முயற்சிக்கும் சந்திரசேகர் ராவ் முயற்சி ஒரு பகல் கனவு” எனத் தெரிவித்தார்.