இந்தியா

பாகிஸ்தானில் குருத்வாரா தாக்கப்பட்ட விவகாரம்: இந்தியாவில் சீக்கியர்கள் போராட்டம்

jagadeesh

பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நான்கானா சாஹிப் குருத்வாரா, சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படுகிறது. இந்த குருத்வாராவுக்குள் வந்த கும்பல் உள் பகுதியை சேதப்படுத்திவிட்டு அங்கு மசூதி கட்டப் போவதாக கூறி, கல்வீச்சில் ஈடுபட்டது. இதனால், குருத்வாராவில் இருந்து சீக்கியர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். மேலும், சீக்கியர்கள் இங்கு வசிக்க கூடாது என்றும் அந்த கும்பல் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், அப்பகுதியில் பதற்றம் உருவானது.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் நோக்கி பேரணியாக செல்ல சீக்கியர்கள் முயன்றனர். இதே போல், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி, வெளியுறவுத் துறை அமைச்சகம், பாகிஸ்தானை கேட்டுக் கொண்டுள்ளது.

குருத்வாரா தாக்குதல் மூலம் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நிலை தெரியவந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குருத்வாராவை தாக்கியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட மத்திய அரசு ஆவன செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.