அதிகமாக வரி செலுத்தியவர்களின் பெயர்களை சாலைகள் மற்றும் கட்டடங்கள் ஆகியவற்றிற்கு வைக்கலாம் என்று பொருளாதார ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.
இந்திய பொருளாதார ஆய்வறிக்கை 2018-19 நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த ஆய்வறிக்கை இந்திய பொருளாதாரம், நிதி பற்றாக்குறை உள்ளிட்டவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசிற்கு சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.
அந்தவகையில் வருமான வரி செலுத்தும் மக்களை ஊக்குவிக்க ஒரு புதிய பரிந்துரையை அளித்துள்ளது. அதில், “பொதுவாக வருமான வரி செலுத்துவதில் மாத சம்பள ஊழியர்கள் சுயதொழில் செய்பவர்களைவிட அதிக சிரமம் அடைகிறார்கள் என்ற எண்ணம் அதிகம் உள்ளது. இவற்றை போக்க வருமான வரி அதிகமாக செலுத்தியவர்களுக்கு சில சலுகைகள் வழங்கலாம். குறிப்பாக ஒரு மாவட்டத்தில் அதிகமாக வரி செலுத்திய முதல் 10 நபர்களின் பெயரை அரசின் முக்கிய கட்டடங்கள், சாலைகள், பள்ளிகள் ஆகியவற்றிற்கு வைக்கலாம். அத்துடன் அவர்களுக்கு விமான நிலயங்களில் சில சலுகைகள் வழங்கலாம்” எனப் பரிந்துரைத்துள்ளது.