மோடி கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றபோது ஹவுஸ்டன் நகரில் நடைபெற்ற ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 50 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடியும், அதிபர் ட்ரம்பும் உரையாற்றினர். அதுஒருவகையில், அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் போன்றே அமைந்ததாக அப்போது கருத்துகள் எழுந்தன.
அந்த வகையில், மோடிக்கு எப்படி அமெரிக்காவில் ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சி நடத்தப்பட்டதோ, அதேபோன்று தற்போது இந்தியாவில் அவருக்கு ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதுவொரு அரசியல் ரீதியிலான பதில் நடவடிக்கைதான். நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசுவது, அமெரிக்காவில் வாழும் 24 லட்சம் இந்திய வாக்காளர்களை கவரும் வகையில் இருக்கும் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்தியா அமெரிக்கா இடையே 2008-ஆம் ஆண்டு 66 பில்லியன் டாலராக (ரூ47,43,09.33 கோடி) இருந்த வர்த்தக உறவு, 2018-ல் 142.6 பில்லியன் டாலராக (ரூ1,02,47,95.61) உயர்ந்தது. அப்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7-8 சதவீதமாக ஒவ்வொரு ஆண்டும் இருந்தது. ஆனால், 2019- 2020 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக சரிந்துள்ளது.
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ட்ரம்ப், சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றுவிட்டு தற்போது, ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கலந்துகொண்டுள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா கலந்து கொண்டுள்ளார். முன்னதாக, அதிபர் டொனால்டு ட்ரம்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார்.