கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின்குமார் கட்டீலை அக்கட்சி நியமித்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா, ஜூலை மாதம் 26 ஆம் தேதி முதலமைச்சர் ஆனார். இதனைத் தொடர்ந்து அவர் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார். எனினும் அவர் அமைச்சரவை இல்லாமல் 25 நாட்கள் செயல்பட்டு வந்தார். இந்தச் சூழலில் இன்று அவரது அமைச்சரவையில் 17 புதிய அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர்.
இந்நிலையில் கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின்குமார் கட்டீலை அக்கட்சி இன்று நியமித்துள்ளது. ஏற்கெனவே எடியூரப்பா கடந்த மூன்று ஆண்டுகளாக பாஜக மாநில தலைவர் பதவியை வகித்து வந்தார். தற்போது அவர் முதலமைச்சராக பதவியேற்ற நிலையில் மாநில தலைவர் பதவிக்கு மற்றொருவரை நியமித்து பாஜக உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.