இந்தியா

இன்ஸ்டா நட்பால் நேர்ந்த விபரீதம்: யூடியூப் பார்த்து பிரசவித்த சிறுமிக்கு நேர்ந்த கதி!

JustinDurai

வீட்டில் சொன்னால் பிரச்சனையாகி விடுமோ என்று பயந்து சிறுமி கர்ப்பத்தை மறைத்து வந்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 15 வயதான சிறுமிக்கு சோசியல் மீடியா மூலமாக ஆண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர். இதில் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். 

இதுகுறித்து வீட்டில் சொன்னால் பிரச்சனையாகி விடுமோ என்று பயந்து சிறுமி கர்ப்பத்தை மறைத்து வந்துள்ளார். மருத்துவமனைக்கு அடிக்கடி தனியாகச் சென்று செக்-அப்பும் செய்து வந்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில்தான், மருத்துவமனைக்கு சென்றால் எல்லாம் அம்பலமாகிவிடும் எனப் பயந்து அச்சிறுமி வீட்டிலேயே பிரசவிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக யூடியூப்பில், வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தொடர்பான வீடியோக்களை தேடிப் பார்த்து சுய பிரசவத்துக்கு தயாராகி வந்துள்ளார். இதையடுத்து கடந்த மார்ச் 2ஆம் தேதி சிறுமிக்கு பிரசவ வலி ஏற்படவே, வீட்டில் தனது அறைக் கதவை பூட்டிவிட்டு  யூடியூப் வீடியோவில் சொல்லியபடி சுயமாக பிரசவிக்க தொடங்கியுள்ளார். பிரசவத்துக்குப் பின் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார் அந்த சிறுமி. கர்ப்பம் தரித்ததை மறைத்தது போலவே குழந்தை பெற்றெடுத்ததையும் மறைக்க திட்டமிட்ட சிறுமி  விபரீத முடிவு எடுத்துள்ளார். தனக்கு பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற சிறுமி, அக்குழந்தையின் உடலை வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் மறைத்து வைத்துவிடார். 

சிறிது நேரத்தில் வீடு திரும்பிய சிறுமியின் தாய், தனது மகளின் உடல்நிலை பலவீனமாக இருப்பதை பார்த்துவிட்டு அவரிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் தனக்கு நேர்ந்த சம்பவத்தை எல்லாம் தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். அதிர்ச்சியில் உறைந்துபோன சிறுமியின் தாய், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். விரைந்துவந்த போலீசார் கொல்லப்பட்ட பச்சிளம் சிசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தற்போது, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு கொலைக் குற்றம் தொடர்புடைய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும். சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான நபரையும் தேடி வருகிறோம்'' என்று கூறினார்.