இந்தியா

“எல்லோருக்கும் இந்த உணவு கிடைக்குமா?”.. நாகலாந்து அமைச்சரிடம் நெட்டிசன்கள் சரமாரி கேள்வி

JustinDurai

''நீங்கள் மாநில அமைச்சர் என்பதால் இப்படியான உணவுகள் கிடைத்திருக்கிறது. சாதாரண பயணிகளுக்கு இந்த உணவு ரயிலில் கிடைக்காது'' என தனது கருத்தை வெளிப்படுத்தினார் நெட்டிசன் ஒருவர்.

நாகாலாந்து மாநில பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சரும், அம்மாநிலத்தின் பாஜக தலைவருமான டெம்ஜென் இம்னா அலோங், அண்மையில் கவுகாத்தியில் இருந்து திம்பூருக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். ரயிலில் அவருக்கு இரவு உணவாக சப்பாத்தி, ஆம்லேட் உள்ளிட்ட விதவிதமான உணவுகள் வழங்கப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்ததுடன், ரயில்வே நிர்வாகத்தின் சேவையையும் வெகுவாகப் பாராட்டி பதிவிட்டார்.

அமைச்சருக்கு வழங்கப்பட்ட இந்த உணவு குறித்து நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ''ராஜ்தானி எக்ஸ்பிரஸில் நான்கு முறை பயணம் செய்திருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட இப்படியொரு விதவிதமான உணவு கிடைத்ததில்லை" என்று நெட்டிசன் ஒருவர் கமென்ட் செய்தார். மற்றொரு நெட்டிசன், ''நீங்கள் மாநில அமைச்சர் என்பதால் இப்படியான உணவுகள் கிடைத்திருக்கிறது. சாதாரண பயணிகளுக்கு இந்த உணவு ரயிலில் கிடைக்காது'' என தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ச்சியாக இதுபோன்ற கமெண்டுகள் வரவே, அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங், ரயில்வே நிர்வாகத்தை டேக் செய்து இதுதொடர்பாக கோரிக்கை வைத்திருக்கிறார். அந்த பதிவில், ''எனக்கு கிடைத்த உணவு போன்று மற்றவர்களுக்கும் கிடைத்ததில்லை என நிறைய பேர் கமெண்ட் செய்திருக்கின்றனர். அவர்களுக்கு உரிய பதிலளியுங்கள். என்னைப் பொறுத்தவரையில் ரயில்வே நிர்வாகத்தின் சேவை சிறப்பாக இருந்தது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: ”வெறும் ஒரு நிமிஷம்தான் எக்ஸ்ட்ரா..” பெங்களூரு டிராஃபிக்கில் சிக்காமல் இருக்க இதுதான் வழி!