ஆந்திரா முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு விமானநிலையத்தில் சிறப்பு அந்தஸ்து வழங்க பாதுகாப்பு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.
சந்திரபாபு நாயுடு கடந்த ஆட்சியின் போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தார். ஆனால் ஆந்திராவிற்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்ததன் காரணமாக அந்தக் கூட்டணியில் சந்திரபாபு நாயுடு விலகினார். இதையடுத்து மத்தியில் பாஜக ஆட்சி அமையக்கூடாது எனத் தீவிரமாக செயல்பட்டு வந்தார். மத்தியில் ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சி எடுத்தார்.
ஆனால் அவரின் பல்வேறு முயற்சிகளையும் தவிடு பொடியாக்கி பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தது. அது ஒருபுறமிருக்க ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆட்சியை கைப்பற்றியது. ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார்.
இதனிடையே தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுக்கு மாவோயிஸ்ட் அச்சுறுத்தல்கள் இருப்பதால் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றாலும் அவருடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை நடைபெற்ற கட்சி உறுப்பினர்கள் சந்திப்பை முடித்துவிட்டு இரவு சந்திரபாபு நாயுடு விஜயவாடா விமான நிலையத்துக்கு வந்தார். சந்திரநாயுடு இசட்பிளஸ் பாதுகாப்பில் இருப்பதால் நேரடியாக வி.ஐ.பி.க்கள் வாகனத்தில் ஏறி விமானத்துக்கு செல்ல முயன்றார்.
ஆனால் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரை நேரடியாக செல்ல அனுமதிக்காமல் பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து சந்திரபாபு நாயுடு பயணிகளோடு பயணியாக வரிசையில் நின்று ஸ்கேன் கருவியை கடந்து சென்றார். அவரை விமான நிலைய பாதுகாப்பு படை வீரர் சோதனை செய்தார்.
விமான நிலையத்தில் இருந்து விமானம் நிற்கும் இடம் வரை விஐபி வாகனத்தில் செல்ல அனுமதி கேட்டார். ஆனால் அந்தச் சலுகையும் மறுக்கப்பட்டு பேருந்தில் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் சந்திரபாபு நாயுடுவும் விமான நிலையத்தின் பேருந்தில் ஏறி சென்றார். இதற்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.