இந்தியா

மைசூர் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு குழு - கர்நாடக முதல்வர்

JustinDurai
மைசூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து விசாரிக்க மாநில அரசு ஒரு சிறப்பு குழுவை அமைக்கும் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் எஸ் பொம்மை கூறினார்.
கா்நாடக மாநிலம் மைசூரைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவர், செவ்வாய்க்கிழமை தனது ஆண் நண்பருடன் சாமுண்டி மலை அருகே உள்ள மலைக்குன்றுக்கு சென்றார். அப்போது, வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பலைச் சோ்ந்தவர்கள் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த மாணவி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இக்குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மாநில அரசை கண்டித்து காங்கிரஸ் மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் கூறினர். கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான விவகாரம் கா்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ''இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம். எனது அரசு அதை தீவிரமாக எடுத்துள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். சம்பவம் குறித்து விசாரிக்க மாநில அரசு ஒரு சிறப்பு குழுவை அமைக்கும்'' என்று கூறினார்.