இந்தியா

கொரோனா பாசிட்டிவ்... ஆம்புலன்சில் சென்ற பெண் மாயம்... தொடரும் தேடுதல் வேட்டை

webteam

கோப்புப்படம் 

பெங்களூரு பொம்மனஹள்ளியைச் சேர்ந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆம்புலன்சில் சென்ற ஒரு பெண்ணை இரண்டு வாரங்களாக காணவில்லை என குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். 

செப்டம்பர் 4 ம் தேதியன்று தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) சென்றுள்ளார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை தனிமைப்படுத்தவேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர். உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்துள்ள போலீஸ், அந்தப் பெண் கடைசியாக தங்கியிருந்த டெல்லி பகுதியிலும் தேடியுள்ளனர். 

"செல்போனை அவர் எடுத்துச்செல்ல ஆம்புலன்சில் வந்தவர்கள் அனுமதிக்கவில்லை. நாங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறோம் என சொன்னபோதும் அவர்கள் கேட்கவில்லை. பாதிப்பின் இரண்டாம் கட்டத்தில் இருப்பதால், மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் என்று கூறினார்கள்" என்கிறார் அனுஷாவின் மருமகன் விகாஷ்குமார்.



பொம்மனஹள்ளியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட அடுத்த நாள் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டுக்கு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாகக் கூறினர். விசாரித்தால் அப்படியொரு நோயாளி யாரும் அனுமதிக்கப்படவில்லை என மருத்துவ நிர்வாகம் கூறியதும், உடனடியாக குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் வெளியே சென்றிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. செப்டம்பர் 8 ஆம் தேதியன்று டெல்லியில் இருந்து அனுஷா போலீசாரிடம் பேசியுள்ளார். ஆனாலும் அவரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.