பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள கடை ஒன்று பிரபலமான 'மைசூர் பாக்' உட்பட பல்வேறு இனிப்புகளின் பெயரை மாற்றியுள்ளது.
மைசூரு பாக் என்பது தென்னிந்தியாவின், குறிப்பாக கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்றாகும். இது மைசூரு அரண்மனையில் செய்யப்பட்டதால் ’மைசூரு பாக்’ என்று பெயர் பெற்றது. இது, தற்போது நாடு முழுவதும் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள கடை ஒன்று, பிரபலமான மைசூரு பாக் என்ற பெயரை மாற்றியுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த கடைக்காரர் ஒருவர், தங்கள் இனிப்புப் பண்டங்களின் பெயர்களில் இருந்து 'பாக்' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக 'ஸ்ரீ' என்று மாற்றியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “எங்கள் இனிப்புப் பண்டங்களின் பெயர்களில் இருந்து 'பாக்' என்ற வார்த்தையை நீக்கிவிட்டோம். 'மோதி பாக்' என்பதை 'மோதி ஸ்ரீ' என்றும், 'கோண்ட் பாக்' என்பதை 'கோண்ட் ஸ்ரீ' என்றும், 'மைசூரு பாக்' என்பதை 'மைசூரு ஸ்ரீ' என்றும் பெயர் மாற்றியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
’மைசூரு பாக்’ என்ற இனிப்பு வகையில், ’பாக்’ என பாகிஸ்தான் பெயர் இருப்பதாக நினைத்து, இந்தப் பெயரை அந்தக் கடைக்காரர் நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் அந்த இனிப்பு வகையில் உள்ள 'பாக்' என்ற சொல் பாகிஸ்தானைக் குறிக்கவில்லை. ’பாக்’ என்றால், கன்னடத்தில் இனிப்பு என்று பொருளாகும்.