இந்தியா

பாலியல் வன்கொடுமை வழக்கை வாபஸ் பெற மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு

jagadeesh

உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் பெண்களின் பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வியை எழுப்பி வருகின்றனர். ஹதராபாத் மற்றும் உன்னாவ் சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்நிலையில், பாலியல் வழக்கை திரும்ப பெற மறுத்த பெண் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை,‌‌ பாலியல் வன்கொடுமை‌ செய்தவர்கள் ஜாமீனில்‌‌‌ வெளியே வந்த பின்னர் பெட்ரோல் ‌ஊற்றி தீ வைத்தனர்‌. டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், உயிரிழந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், 30 வயது பெண் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் மீது முசாபர்நகர் காவல் நிலையத்தில் புகார் தொடர்ந்து இருந்தார். ஆனால், அந்தப் பெண்ணை புகாரை திரும்பப்பெற வன்கொடுமை செய்த கும்பல் தொடர்ந்து மிரட்டி வந்தனர். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், அந்தப் பெண் மீது ஆசிட்டை வீசியது. இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பேசிய முசாபர்நகர் காவல் நிலைய அதிகாரி " ஒரு கும்பல் புகாரை வாபஸ் பெறக்கோரி பெண் மீது ஆசிட் வீச்சு தாக்குதலை நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்களை தேடிக்கொண்டு இருக்கிறோம். அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள்" என தெரிவித்துள்ளார்.