இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, வணிகத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் சொந்தமாக குளிர்பான நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இலங்கை தவிர, இந்தியாவிலும் அவர் வணிகத்தை விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் முத்தையா முரளிதரன் நிறுவனம் சார்பில் ரூ.1,650 கோடி முதலீட்டில் குளிர்பான தயாரிப்பு ஆலை தொடங்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்காக முத்தையா முரளிதரனுக்கு 25.75 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த இடத்தை முத்தையா முரளிதரன் நிறுவனத்துக்கு ஜம்மு காஷ்மீர் அரசு வழங்கி உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கு மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தவிர, இதற்கு முதல்வர் உமர் அபதுல்லா விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.
குறிப்பாக, சிபிஐ(எம்) எம்எல்ஏ முகமது யூசுப் தாரிகாமி, “இந்திய கிரிக்கெட் வீரர் அல்லாத ஒருவருக்கு ஒரு பைசாகூட செலவழிக்காமல் எப்படி நிலம் வழங்கப்பட்டது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்” என்றார். இதேபோல், காங்கிரஸ் எம்எல்ஏ ஜிஏ மிரும் கோரிக்கை வைத்திருந்தார்.
இதுதொடர்பாகப் பதிலளித்த வேளாண் உற்பத்தி அமைச்சர் ஜாவேத் அகமது தார், “இது வருவாய்த் துறை தொடர்பான விஷயம். எங்களிடம் எந்த தகவலும் இல்லை, மேலும் உண்மைகளை அறிவோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, குளிர்பான திட்டத்திற்காக நிலம் இலவசமாக ஒதுக்கப்பட்ட சர்ச்சைக்கு மத்தியில், முத்தையா முரளிதரன் அந்தத் திட்டத்திலிருந்து விலகியுள்ளார். தனது பான நிறுவனத்திற்கு பாட்டில் ஆலை அமைப்பது தொடர்பான திட்டத்தை வாபஸ் பெற அவர் விண்ணப்பித்திருப்பதாகவும், இப்போது அதை புனேவில் நிறுவப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.