இந்தியா

40 ஆண்டுகளாக மரணம் நிகழாமலா இருக்கிறது? இப்போது ஏன் அதிகப்படியான அழுகை?: யோகி கேள்வி

40 ஆண்டுகளாக மரணம் நிகழாமலா இருக்கிறது? இப்போது ஏன் அதிகப்படியான அழுகை?: யோகி கேள்வி

webteam

மூளை அழற்சியால் கடந்த 40 ஆண்டுகளாக மரணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்க தற்போது மட்டும் குழந்தைகள் மரணத்தில் அதிகப்படியாக அழுவதும், கூக்குரலிடுவதும் ஏன் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு மாதத்தில் சுமார் 60 குழந்தைகள் இறந்ததற்கு யோகி அரசு மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதுகுறித்து பேசிய யோகி ஆதித்யநாத், கோரக்பூர் மருத்துவமனை துவங்கப்பட்டதிலிருந்து 40 ஆண்டுகளாக இதுபோன்ற மரணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 60 குழந்தைகள் இறந்ததற்கு தற்போது மட்டும் ஏன் அதிகப்படியான அழுகையும், கூக்குரலும் எழுகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மே மாதம் மட்டும் சுமார் 92 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 20 மாவட்டங்களில் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகளுக்கு மூளை அழற்சி மற்றும் ஒவ்வாமை நோயை கட்டுப்படுத்தும் கருவிகளை வழங்கியுள்ளோம் என்று கூறினார்.

இந்திய பொருளாதாரம் குறித்து மத்திய அரசு மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து யோகி கூறும்போது, பொருளாதாரத்தில் வேகமாக இந்தியா வளர்ந்து வருகிறது. பொருளாதார ரீதியாக மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை இந்திய மக்கள் மட்டுமல்ல உலகமே வியந்து பாராட்டுகிறது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் இல்லாமல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வெற்றி பெற்றிருக்காது.

மக்கள் அனைவரும் ராமர் கோவில் கட்டவே விரும்புகின்றனர், ஆனால் நீதிமன்றம் தடையாக உள்ளது. தீர்ப்பு வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும். ஆனால், நாம் ராமர் கோவிலின் முக்கியத்துவத்தை மறந்துவிடக்கூடாது என்று யோகி கூறினார்.