இந்தியா

திருப்பதியில் நாதஸ்வரம் வாசிக்கும் ஆஸ்தான வித்வான்களான இஸ்லாமியர்கள் !

webteam

மத ஒற்றுமையும், சகோதரத்துவமும் இந்தியாவின் அடையாளம் என்பதை வெளிக்காட்டும் விதமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்லாமிய சகோதரர்கள் கடந்த 24 ஆண்டுகளாக ஆஸ்தான நாதஸ்வர வித்வான்களாக கலைச்சேவையாற்றி வருகிறார்கள்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட காசிம், பாபு சகோதர்கள். மத்திய அரசின் 'பத்மஸ்ரீ' விருது பெற்ற நாதஸ்வர வித்வான் ஷேக் சின்ன மவுலானாவின் மகன்கள் ஆவர். இவர்கள் தங்கள் தந்தையையே குருவாக ஏற்று, 7 வயதில் நாதஸ்வரம் கற்கத் தொடங்கினர். 17 வயதில் தனியா‌க நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பித்த காசிம், பாபு சகோதரர்கள், திருப்பதி தேவஸ்தானத்தில் தங்கள் நாதஸ்வர இசையால் கலைச்சேவை செய்துவருகிறார்கள். இவர்களின்‌ அர்ப்பணிப்புக்கு மதிப்பளித்து கடந்த 1996 ஆம் ஆண்டு கோவிலின் ஆஸ்தான வித்வான்களாக அறிவித்தது திருப்பதி தேவஸ்தானம்.

இதையடுத்து பிரம்மோற்சவம், ரத சப்தமி, ஆனி ஆஸ்தானம், தெலுங்கு வருடப்பிறப்பு, திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் உள்ளிட்ட அனைத்து விசேஷங்களிலும் கடந்த 24 ஆண்டுகளாக இந்த இஸ்லாமிய சகோதரர்கள் நாதஸ்வர இசையால் அலங்கரிக்கிறார்கள். தற்போது திருப்பதி பிரம்மோத்ஸ்வம் கோலாகலமாக நடந்துவரும் வேளையில் இந்த இஸ்லாமியர்கள் இசையால் இறைபணி செய்துவருகிறார்கள்.

இவர்களின் திறமையை தமிழக அரசு கலைமாமணி விருதால் கெளரவித்துள்ளது. ஸ்ரீரங்கத்தில் வசிக்கும் இந்தச் சகோதரர்கள், இசைக்கும், பக்திக்கும், எந்த வேறுபாடும் கிடையாது என்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியா ஜனநாயகத்தின் அடிநாதம், இவர்களின் நாதஸ்வர இசையால், அன்பு மணத்தை பரப்புகிறது என்றால் அது மிகையல்ல.