இந்தியா

மதங்களை உடைத்த மனித நேயம் ! அசத்திய முஸ்லீம் இளைஞர்கள்..!

மதங்களை உடைத்த மனித நேயம் ! அசத்திய முஸ்லீம் இளைஞர்கள்..!

webteam

கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் இருக்கும் கோவில்களை முஸ்லீம் இளைஞர்கள் கொண்ட அமைப்புகள் சுத்தம் செய்து வருவது நெகிழ்சியை ஏற்படுத்தி வருகிறது.

கடும் மழை, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவை சேர்ந்து கேரளாவை புரட்டிப் போட்டிருக்கிறது. விடாது கொட்டிய பெருமழையின் பாதிப்பிலிருந்து மீள போராடுகின்றனர் கேரளா மக்கள். பல இடங்களில் வீடுகளில் சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியாத நிலையில், 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களிலேயே தங்கியுள்ளனர். இளைஞர்கள், பொதுமக்கள், ராணுவம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பலரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இப்போது வரை ஈடுபட்டிருக்கிறார்கள். கேரளாவை மீண்டும் கட்டமைக்க மக்கள் மிகுந்த அன்போடு பணமாகவும் பொருளாகவும் நிவாரணம் வழங்கி வருகிறார்கள். 

கேரளாவை சேர்ந்த முஸ்லீம் இளைஞர்கள் வயநாடு அருகே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது  அங்கிருந்த அதிகாரிகள் சிலர் அருகாமையில் உள்ள ஸ்ரீ மஹா விஷ்ணு கோவிலையும் சுத்தம் செய்ய முடியுமா என தயக்கத்துடனே கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் "நாங்கள் முஸ்லீம்கள் தான். ஆனால் கோவில் அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தால் உடனடியாக கோவிலை சுத்தம் செய்ய தயாராக இருக்கிறோம்" என்று முஸ்லீம் இளைஞர் நஜூமுதீன் கூறியுள்ளார். இவர் ஐக்கிய அரபு நாட்டில் பொறியாளராக பணியற்றி வருகிறார். இதனை அறிந்த கோவில் நிர்வாகமும் கோவிலை சுத்தப்படுத்த அனுமதி அளித்தனர். கோவிலின் கருவறையை தவிர அனைத்து பகுதியையும் முஸ்லீம் இளைஞர்கள் சுத்தம் செய்து கொடுத்தனர். 

கோவிலின் கருவறையை ஏன் சுத்தம் செய்யவில்லை ? என்ற கேள்விக்கு பதிலளித்த நிஜாமுதீன் " கோவிலின் கருறையின் மதிப்பும் புனிதமும் எங்களுக்கு தெரியும். கோவிலின் கருவறையை பூசாரிகளோ, அர்ச்சகர்களோ சுத்தம் செய்வதுதான் சரியாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.இதேபோல நெகிழ்ச்சியான சம்பவம் கேரளா மாநிலத்தின் கொலப்புழா என்ற இடத்தில் நடந்துள்ளது. கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் கொலப்புழா அருகில் உள்ள மன்னர்காடு ஐய்யப்பன் கோவில் பெருமழை வெள்ளம் காரணமாக நான்கு நாட்கள் மூடப்பட்டது. 

இதனையறிந்த  எஸ்.கே.எஸ்.எஸ்.எஃப் என்ற அமைப்பை சேர்ந்த 20 முஸ்லீம் இளைஞர்கள் அக்கோவிலை சுத்தம் செய்ய கோவில் அதிகாரிகளை கேட்டுள்ளனர். இதற்கு அதிகாரிகள் உடனடியாக சம்மதம் கொடுத்தனர். உடனடியாக களத்தில் இறங்கிய இளைஞர்கள் நான்கு மணி நேரத்தில் கோவிலை மிகத்திறமையாக சுத்தம் செய்து நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து மன்னர்காடு ஐயப்பன் கோவில் நிர்வாகியான கே.கோபாலகிருஷ்ணன் " கோவில் வெள்ளத்தில் சேதமடைந்த சமயத்தில் அவர்களின் உதவியை பாராட்டுகிறோம். அவர்களின் இந்த உதவி சாதி, மதம் என்பதையெல்லம் துாக்கி எறிந்து மீண்டும் ஒருமுறை மனிதத்தை நிரூபித்துள்ளது" என உணர்ச்சிபொங்க தன்னுடைய நெகிழ்ச்சியை தெரிவித்தார்.