யோகா சொல்லிக் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் டீச்சருக்கு அந்த சமூகத்தைச் சேர்ந்த சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் ரபியா நாஸ். சிறு வயதிலேயே யோகா கற்ற இவர், யோகா குரு, ராம்தேவுடன் இணைந்து பல மேடைகளில் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் மெடல்களையும் பெற்றுள்ளார். இப்போது யோகா டீச்சாராக இருக்கும் இவருக்கு கடந்த சில வருடங்களாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்ணாக இருந்து கொண்டு எப்படி யோகா கற்றுக்கொடுக்கலாம் என்று முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சிலர் போனில் மிரட்டியும் வருகின்றனர்.
இதுபற்றி ரபியா கூறும்போது, ‘தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டது. இதனால் சில வருடங்களாக எந்த பிரச்னையும் இல்லை. இப்போது மீண்டும் கொலை மிரட்டல். புதன்கிழமை சிலர் என் வீட்டின் மீது கல்வீசி தாக்கினர். போலீசார் வந்ததால் பிரச்னையில்லை. பிறகு இன்று மீண்டும் கல்வீசி தாக்கியுள்ளனர்’ என்றார். ’பத்வா விதிக்கப்பட்டுள்ளதா?’ என்று கேட்டபோது, ‘இல்லை, அது வேறு. இது வேறு’ என்றார்.
இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.