Uttarakhand
Uttarakhand  Twitter
இந்தியா

'லவ் ஜிகாத்' புகார்: ஊரைவிட்டு காலி செய்யும் நிலையில் முஸ்லிம்கள்.. என்ன நடக்கிறது உத்தரகாண்டில்..?

Justindurai S

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள புரோலா என்ற ஊரில் சுமார் 400 முதல் 500 முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். புரோலாவில் கடந்த மே 26ஆம் தேதி 14 வயதான ஒரு இந்து சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் கடத்தி சென்றுள்ளனர். நல்வாய்ப்பாக, அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டதுடன், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இருவர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

இதனிடையே, கைதான இருவரில், 24 வயது நிரம்பிய ஒரு வாலிபர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவ்விவகாரம் அப்பகுதியில் பெரும் பதட்டமான சூழலை உருவாக்கியிருக்கிறது. சிறுமி கடத்தப்பட்டது 'லவ் ஜிகாத்' எனக்கூறி விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் இவ்விஷயத்தை பூதாகரமாக்கி உள்ளன.

Uttarakhand

முஸ்லிம் ஆண்கள் இந்து பெண்களை குறிவைத்து திருமணம் செய்து அவர்களை கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றுவதாக அங்குள்ள சில வலதுசாரி அமைப்புகள் கூறி வருகின்றன. இது 'லவ் ஜிகாத்' என்று கூறப்படுகிறது.

சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கடந்த மே 27ஆம் தேதி சில இந்துத்துவ அமைப்புகள் கண்டனப் பேரணி நடத்தினர். அப்போது முஸ்லிம்கள் நடத்தும் கடைகளை மூடுமாறு அரசு அதிகாரிகள் கட்டாயப்படுத்தியாகக் கூறப்படுகிறது.

அதேபோல் மே 29ஆம் தேதி நடந்த மற்றொரு பேரணியில் நூற்றுக்கணக்கான இந்துத்துவ ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். அந்த பேரணியில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பலர் கோஷமிட்டதாக கூறப்படுகிறது. முஸ்லிம்களை புரோலா பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கோஷம் எழுப்பியதுடன் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளையும், முஸ்லிம்களின் பெயர் தாங்கிய கடை போர்டுகளையும் அடித்து சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து முஸ்லிம்கள் தங்கள் நடத்திவந்த கடைகளை திறக்க அச்சப்பட்டு மூடியே வைத்துள்ளனர். அதே நேரத்தில் முஸ்லிம்கள் அல்லாதோர் நடத்தும் கடைகள் வழக்கம்போல் செயல்படுகின்றன.

Uttarakhand

இதனைத்தொடர்ந்து கடைகளை திறக்கவிடாமல் மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், தங்கள் கடைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் முஸ்லிம் வியாபாரிகள் காவல்துறையினரிடம் முறையிட்டனர். ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு போலீசார் செவிசாய்க்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இவ்விவாகரம் குறித்து முஸ்லீம் வியாபாரி ஒருவர் அங்குள்ள உள்ளூர் ஊடகமொன்றில் கூறுகையில், ''சிறுமி கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு (இந்துத்துவ அமைப்பினர்) இன்னும் என்ன வேண்டும்? இதில் நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் எங்கள் வீடுகளையும் கடைகளையும் விட்டு வெளியேற வேண்டும் என விரும்புகிறார்களா? அப்படியெனில் நாங்கள் எங்கே போவோம்? நாங்கள் இங்கே காலம்காலமாக வசித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே சில முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடு மற்றும் கடைகளின் சுவற்றில், முஸ்லிம்கள் வரும் ஜூன் 15ஆம் தேதிக்குள் புரோலா ஊரைவிட்டு காலி செய்ய வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் புரோலாவில் பதற்றமான சூழல் நிலவுகிறது. சில முஸ்லிம் குடும்பங்கள் மிரட்டலுக்கு பயந்து ஊரைவிட்டு காலி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பதட்டமான சூழல் அருகாமையில் உள்ள பகுதிகளிலும் எதிரொலிக்கிறது. புரோலாவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு சிறிய நகரமான பார்கோட்டில், சில முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகளின் கதவுகளில் 'X' என்ற மறைமுக குறியீடு வரையப்பட்டுள்ளது. இது இஸ்லாமியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Uttarakhand

உத்தரகாண்ட்டை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் திரிலோச்சன் பட் என்பவர் சமீபத்திய ஒரு ஊடக உரையாடலின்போது கூறுகையில், “ஒருகாலத்தில் உத்தரகாண்ட் அமைதியான மாநிலமாக இருந்து வந்தது. இந்துக்களும் முஸ்லிம்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்தனர். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சிறுபான்மை மக்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மாநிலத்தில் எங்காவது ஒரு மூலையில் முஸ்லிம்களுக்கு எதிரான பேரணி நடந்தவாறே இருக்கிறது. புரோலா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நீடித்து வரும் பதட்டங்கள், கடந்த சில மாதங்களாக மாநிலத்தில் சூழ்ந்துள்ள முஸ்லிம் விரோத வெறுப்பு அரசியலின் விளைவால் வந்தது. முஸ்லிம்களுக்கு எதிரான பேரணி நடத்த இந்துத்துவ அமைப்புகளுக்கு அரசு சுதந்திரம் கொடுக்கிறது'' என்றுள்ளார்

புரோலாவில் உள்ள வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் பிரிஜ் மோகன் சௌஹான் கூறுகையில், ''முஸ்லிம் வியாபாரிகள் தங்கள் கடைகளை மீண்டும் திறக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். முஸ்லிம்களின்  கடைகளை மூடும்படி நாங்கள் வற்புறுத்தவில்லை. அவர்களுடன் தொடர்பில் உள்ளோம். இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் ஒரு வாரத்தில் கடைகளைத் திறப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்கிறார் அவர்.

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் துஷ்யந்த் குமார் கௌதம் இவ்விவாகரம் குறித்து பேசுகையில், புரோலாவில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறி வருவதாக பரவும் செய்திகளை மறுத்தார். மேலும் அவர், ''சிறுமி கடத்தப்பட்ட விவகாரத்தில் 'லவ் ஜிஹாத்' பின்னணி இருக்கிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  'லவ் ஜிஹாத்' சாத்தியக்கூறுகள் இருப்பதால் அதில் தொடர்புடையவர்களே ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். அரசு நிலைமையை கண்காணித்து வருகிறது'' என்று பேசியுள்ளார்.

Pushkar Singh Dhami, Uttarakhand CM

சில வலதுசாரி அமைப்புகள் பல ஆண்டுகளாகவே, உத்தரகாண்ட் ஒரு ‘தேவபூமி’ (கடவுள்களின் நிலம்) என்ற கருத்தாக்கத்தை உருவாக்கி, சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக அல் ஜசீரா ஊடகம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.  உத்தரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.