டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முரசொலி, அமித் ஷா மற்றும் ரேகா குப்தாவை கடுமையாக விமர்சிக்கிறது. செங்கோட்டையில் நடந்த இந்த பயங்கர சம்பவம், பாதுகாப்பில் ஏற்பட்ட கோளாறுகளை வெளிப்படுத்துகிறது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் தொடர்பு, கார் குண்டு வெடிப்பு மற்றும் அதற்கு முன் நடந்த வெடிமருந்து கைப்பற்றல் ஆகியவற்றை முரசொலி சுட்டிக்காட்டுகிறது.
டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி, அமித் ஷா மீதும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து தலையங்கம் எழுதியிருக்கிறது. குண்டு வெடிப்பு நடந்தது சாதாரண பகுதியில் இல்லை, செங்கோட்டையில். குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட கார், அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவருடையது என்றும், தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானது என்றும் தெரிய வந்துள்ளது.
காஷ்மீர் புல்வாமா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் உமர் முகமது காரை ஓட்டி வந்துள்ளார். அவரும் உயிரிழந்து விட்டார். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் "ஜெய்ஷ் இ முகமது" அமைப்புக்கு இதில் தொடர்பு இருப்பதாக டெல்லி போலீஸ் சொல்லி இருப்பதையும் முரசொலி குறிப்பிட்டுள்ளது. மேலும், குண்டு வெடிப்பில் அம்மோனியம் நைட்ரேட், எரிபொருள் எண்ணெய், டெட்டனேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னாள் ஃபரிதாபாத்தில் ஏராளமான வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டது. அதற்கும் இந்தச் சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என புலனாய்வு அமைப்பினர் கருதுகிறார்கள்.
கார் குண்டு வெடிப்பு நேரத்து புதிய சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. செங்கோட்டை பார்க்கிங் பகுதியில் 3 மணிநேரம் அந்தக் கார் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. HR 26 CE 7674 என்ற பதிவெண் கொண்ட ஹூண்டாய் ஐ20 கார், மாலை 3.19 மணிக்கு உள்ளே நுழைவதும், பின்னர் 6.30 மணிக்கு வெளியேறுவதும் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது என்று சம்பவம் குறித்து குறிப்பிட்ட முரசொலி, நேரில் பார்த்தவர்கள் கூறிய விஷயங்களையும் குறிப்பிட்டுள்ளது. அதோடு “இது ஒரு துரதிஷ்டமான சம்பவம்” என்று சொல்லி அமைதியாகி விட்டார் டெல்லி பா.ஜ.க. முதலமைச்சர் ரேகா குப்தா. அவரது கடமை அவ்வளவு தானா? அவருக்கு வேறு எந்தப் பொறுப்பும் இல்லையா? கடமையும் இல்லையா? என்று முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
“டெல்லி குண்டு வெடிப்பில் சதி செய்த, ஈடுபட்ட ஒவ்வொருவரும் எங்கள் விசாரணை அமைப்புகளின் முழுமையான நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லி இருக்கிறார். ‘அமித்ஷா ஆவேசம்’ என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்துக்கு முன்னால் உள்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டு இருந்தார்? சம்பவங்கள் நடக்காமல் இருக்க என்ன செய்யப்பட்டது?
கார் குண்டு வெடிப்பு நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு தான். அரியானா மாநிலத்தில் ஃபரிதாபாத் என்ற இடத்தில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் பயங்கர வெடி பொருட்களைத் தயாரிக்கக் கூடிய 350 கிலோ எடை கொண்ட அம்மோனியம் நைட்ரேட் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து இது நடந்துள்ளது.
அரியானாவில் இப்போது ஆட்சி செய்வதும் பா.ஜ.க. தான். பா.ஜ.க. அல்லாத மாநிலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால், பா.ஜ.க.வினர் எத்தகைய வார்த்தை வெடிகுண்டுகளை வீசுவார்கள் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் இப்போது சம்பவம் பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் நடந்ததால் அமைதியாகி விட்டார்கள்.
குண்டு வைத்தது யார் என்று கண்டுபிடித்துவிட்டார்கள். பாதுகாப்பில் கோட்டை விட்டது யார் என்பதும் அனைவர்க்கும் தெரியும். பொறுப்பான அவர்கள் பொறுப்பேற்க வேண்டாமா? என்று முரசொலி கேள்வி எழுப்பியிருக்கிறது.