இந்தியா

’’அண்ணாத்த ஆடுறார்..’’ பாடலுக்கு அசத்தல் நடனம்; சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்த மும்பை காவலர்

Sinekadhara

தனது அசத்தலான நடன அசைவுகளால சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறார் மும்பையைச் சேர்ந்த போலீஸ் காம்ப்லே.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த 38 வயதான அமோல் யஷ்வந்த் காம்ப்லே தனது வேலை நேரம் தவிர மற்ற நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் நடனம் ஆடுவதை பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில், தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற அண்ணாத்த ஆடுறார் பாடலின் இந்திப் பதிப்பான ’’ஆயா ஹை ராஜா’’ என்ற பாடலுக்கு ஆடி வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இது பலரின் பாராட்டுக்களையும், லட்சக்கணக்கில் லைக்குகளையும் வாங்கிக் குவித்திருக்கிறது.

இதுபற்றி அவர் கூறுகையில், ’’இந்த நடனம் இருசக்கர வாகனத்தில் செல்லும் ஒருவரை மாஸ்க் அணியச்சொல்லி காவலர் அறிவுறுத்துகிறார். பிறகு இருவரும் சேர்ந்து ஆயா ஹை ராஜா பாடலுக்கு ஆடுவது போன்ற கருத்தை மையமாகக்கொண்டு வீடியோ எடுத்தோம். இது பல லட்சம் லைக்குகளை பெற்றிருக்கிறது. நான் 2004ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தேன். எனது அண்ணன் ஒரு நடன இயக்குநர். காவல்துறையில் சேர்வதற்கு முன்பு அவருடன் சேர்ந்து சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறேன்.

ஆனால் தற்போது ஒரு காவலராக எனது பணியை சிறப்பாக செய்யவேண்டும் என்பதால் வேலை நேரம் போக மற்ற நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் எனது குழந்தைகள் மற்றும் சகோதரியின் குழந்தைகளுடன் சேர்ந்து நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வருகிறேன். இந்த பாடலுக்கு முன்பே என்னுடைய சில வீடியோக்கள் லட்சத்திற்கும் மேலான லைக்குகளை பெற்றிருக்கிறது’’ என்று கூறியிருக்கிறார். காவலரின் நடனத்தை பார்க்கும் அனைவரும் அவரை மிகவும் பாராட்டி ஊக்குவித்து வருகின்றனர்.