Viral Video X
இந்தியா

மும்பை | பெண் போராட்டக்காரரிடம் போலீசார் அத்துமீறல்.? காவல்துறை விளக்கம்!

நீட் முறைகேட்டிற்கு கண்டனம் தெரிவித்து மும்பை சிவாஜி பார்க் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர் ஒருவர் பெண் போராட்டக்காரரிடம் அத்துமீறி நடந்துகொண்ட வீடியோ வைரலான நிலையில், மும்பை காவல்துறை விளக்களித்துள்ளது.

Premkumar S

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கோரி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கடந்த 1 மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. எனினும், மாணவர்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு செவி சாய்க்காத நிலையில், கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது, பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை கடுமையான தாக்குதலை நடத்தியது இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, டெல்லியில் போராடி வரும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒருபகுதியாக தான், மஹாராஷ்டிராவின் தாதர் பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில், நேற்றைய போராட்டத்தின் போது, சீருடை அணியாத ஆண் காவலர் ஒருவர் பெண் போராட்டக்காரரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மகாராஷ்டிர எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இதுகுறித்து, மும்பை காங்கிரஸ் கட்சித் தலைவர் வர்ஷா கெய்க்வாட், ”போராட்டம் நடத்தும் மாணவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள்; அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன. ஒரு பெண் போராட்டக்காரரைக் கையாள்வதற்குப் பெண் காவலர்களைப் பயன்படுத்தாமல், சீருடை அணியாத ஆண் காவலர் அத்துமீறி நடந்துகொண்டது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனக் சாடியுள்ளார்.

தாதர் போராட்டம்

என்.சி.பி - சரத் பவார் பிரிவு ரோகித் பவார், இந்தச் சம்பவம் மிகவும் அருவருப்பானது. அந்தப் பெண் போராட்டக்காரரிடம் வரம்பு மீறி நடந்துகொண்ட காவலரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்வதுடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.

இந்தசூழலில் தான், இந்த வீடியோவுக்கு மும்பை காவல்துறை விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து மும்பை காவல்துறை வெளியிட்டிருந்த பதிவில், "வைரலாகும் வீடியோ தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுப் பரப்பப்படுகிறது. சாமானிய உடையில் இருந்த காவலர் தீபக் பல்லாள், ஆண் போராட்டக்காரர் ஒருவரைக் கைது செய்ய முயன்றபோது, எதிர்பாராதவிதமாக இடையே அந்தப் பெண் குறுக்கே வந்தார்.பெண் போராட்டக்காரரிடம் தவறாக நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இச்சம்பவம் நடக்கவில்லை. மூத்த அதிகாரிகள் அனைத்துத் தகவல்களையும் சரிபார்த்து உறுதி செய்துள்ளனர். எனவே, உண்மைத்தன்மையைச் சரிபார்க்காமல் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்" என்று மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.