மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ள மனோஜ் ஜராங்கே ஆதரவாளர்கள், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினரை சமூக, கல்விரீதியாக பின்தங்கிய வகுப்பினராக அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு தர கடந்த 2018-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அது நீண்டகாலமாக நிலுவையில் இருந்ததை அடுத்து, மகாராஷ்டிராவின் மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மராத்தா சமூக தலைவரான மனோஜ் ஜராங்கே, இடஒதுக்கீடு கோரி கடுமையாகப் போராடி வருகிறார். அவ்வப்போது உண்ணவிரதப் போராட்டங்களையும் நடத்திவருகிறார். அரசியல் தலைவர்களின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதை அவ்வப்போது கைவிடுவார். கடந்த ஆண்டு இறுதியில், அவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் மும்பையையே ஸ்தம்பிக்க வைத்தது.
அரசாங்கம் கோரிக்கைகளை ஏற்காததால், இன்று முதல் தண்ணீர் குடிப்பதை நிறுத்துவேன்.மனோஜ் ஜராங்கே, மராத்தா சமூக தலைவர்
இந்த நிலையில், மராத்தா இடஒதுக்கீட்டுப் பிரச்னையில் மகாராஷ்டிரா அரசு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டி, மனோஜ் ஜராங்கே கடந்த ஆகஸ்ட் 29 முதல் மும்பையின் ஆசாத் மைதானத்தில் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். இடஒதுக்கீடு போராட்டம் இன்றுடன் நான்காவது நாளை எட்டியுள்ளது. இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவுகளின் பேரில், தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிரா அரசு இந்த விஷயத்தில் சட்டக் கருத்தைப் பெறப்போவதாகத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை பின்வாங்கப் போவதில்லை என மனோஜ் ஜராங்கே தரப்பினர் தெரிவித்துள்ளனர். “அரசாங்கம் கோரிக்கைகளை ஏற்காததால், இன்று முதல் தண்ணீர் குடிப்பதை நிறுத்துவேன். போராட்டக்காரர்கள் மீது தேவேந்திர ஃபட்னாவிஸ் அரசு துப்பாக்கிச் சூடு நடத்தினாலும்கூட, தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்ட இடத்திலிருந்து தாம் அசையப் போவதில்லை. எதுவாக இருந்தாலும் மராத்தாக்களுக்கு ஓபிசி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு கிடைக்கும். எங்கள் கோரிக்கை அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியாகும். போராட்டத்தில் மராத்தாக்கள் கலந்துகொள்ள வேண்டும்” என்று மனோஜ் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தின் முக்கிய கோரிக்கையான 'குன்பி' சாதிச் சான்றிதழ் வழங்குவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 'குன்பி' சான்றிதழ் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வரும் அமைச்சரவைக் குழு, கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளது.
தெற்கு மும்பையில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், நீண்டகால சேதங்களிலிருந்து வணிகங்களைப் பாதுகாக்கவும் அரசாங்கம் அல்லது உயர் நீதிமன்றம் தலையிட வேண்டும்.வீரேன் ஷா, FRTWA தலைவர்
இதற்கிடையே போராட்டம் தொடர்பாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தெற்கு மும்பையில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், நீண்டகால சேதங்களிலிருந்து வணிகங்களைப் பாதுகாக்கவும் அரசாங்கம் அல்லது உயர் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் போராட்டம், தெற்கு மும்பையை முழுமையான குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும், கடைகள் மற்றும் சந்தைகளில் வார இறுதி விற்பனையை பாதித்துள்ளதாகவும் சில்லறை வர்த்தகர்கள் நல சங்க கூட்டமைப்பு (FRTWA) தலைவர் வீரேன் ஷா தெரிவித்துள்ளார்.
இன்னொரு புறம், ஆசாத் மைதானத்தில் பெண் நிருபர்களிடம் ஜரங்கேவின் ஆதரவாளர்கள் சிலர் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள் சங்கம் அவரிடம் புகார் அளித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால், ஊடகங்கள் போராட்டத்தைப் புறக்கணிக்கும் என்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
மராத்தாக்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்ட விவசாய சாதியான குன்பிகளாக அடையாளம் காண வேண்டும் என்றும், இது அவர்களை அரசு வேலைகள் மற்றும் கல்வியில் இடஒதுக்கீடுகளுக்கு தகுதியுடையவர்களாக மாற்றும் என்றும் மனோஜ் வலியுறுத்துகிறார். இதையடுத்தே, மராத்தாக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை ஜராங்கே கோரி வருகிறார். இருப்பினும், இந்த நடவடிக்கை ஓபிசி தலைவர்களின் எதிர்ப்பை எதிர்கொள்கிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரியில், அப்போதைய ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அரசாங்கம் இடஒதுக்கீடு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று மனோஜ் ஜராங்காவேயின் மும்பை நோக்கிய பேரணியின் உறுதியளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரியில், ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக இருந்தபோது, மகாராஷ்டிரா சட்டமன்றம் ஒரு சிறப்பு ஒருநாள் கூட்டத்தொடரை நடத்தியது. அப்போது, மராத்தா சமூகத்தினருக்கு 'சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர்' பிரிவின் கீழ் கல்வி மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஒருமனதாக அங்கீகரித்தது. ஆனால், இந்த இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.