மனோஜ் ஜராங்கே x page,
இந்தியா

மராத்தா இடஒதுக்கீடு.. மீண்டும் போராட்டத்தில் குதித்த மனோஜ் ஜராங்கே.. ஸ்தம்பித்த மும்பை!

மனோஜ் ஜராங்கே, மீண்டும் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்

Prakash J

மராத்தா இடஒதுக்கீட்டுக்காக மனோஜ் ஜராங்கே மும்பையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். மகாராஷ்டிரா அரசு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என எச்சரித்துள்ளார். போராட்டம் மும்பையை ஸ்தம்பிக்க வைத்துள்ள நிலையில், 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மராத்தா இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் மகாராஷ்டிரா அரசு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டி, மனோஜ் ஜராங்கே நேற்று முதல் மும்பையின் ஆசாத் மைதானத்தில் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்

மீண்டும் போராட்டத்தைத் தொடங்கிய மனோஜ் ஜராங்கே

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினரை சமூக, கல்விரீதியாக பின்தங்கிய வகுப்பினராக அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு தர கடந்த 2018-இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், அது நீண்டகாலமாக நிலுவையில் இருந்ததை அடுத்து, மகாராஷ்டிராவின் மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு இடஒதுக்கீடு கோரி பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மராத்தா சமூக தலைவரான மனோஜ் ஜராங்கே, இடஒதுக்கீடு கோரி கடுமையாகப் போராடி வருகிறார். அவ்வப்போது உண்ணவிரதப் போராட்டங்களையும் நடத்திவருகிறார். அரசியல் தலைவர்களின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அதை அவ்வப்போது கைவிடுவார். கடந்த ஆண்டு இறுதியில், அவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் மும்பையையே ஸ்தம்பிக்க வைத்தது.

mumbai

இந்த நிலையில், மராத்தா இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் மகாராஷ்டிரா அரசு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டி, மனோஜ் ஜராங்கே நேற்று முதல் மும்பையின் ஆசாத் மைதானத்தில் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் நேற்று காலை 9.45 மணியளவில் போராட்ட இடத்திற்கு வந்த அவர், சமூகத்திற்கு உரிய இடஒதுக்கீட்டை அரசாங்கம் வழங்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

போராட்டம் குறித்து மனோஜ் ஜராங்கே சொல்வது என்ன?

இதுகுறித்து அவர், "நான் என் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால் இந்த முறை, நீதி இல்லாமல் நாங்கள் மும்பையைவிட்டு வெளியேற மாட்டோம். அவர்கள் என்னைச் சுடலாம் அல்லது சிறையில் அடைக்கலாம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் கேட்கப்பட்டு நிறைவேற்றப்படும் வரை நான் மும்பையைவிட்டு வெளியேற மாட்டேன். மராத்தா சமூகத்தினரின் பொறுமையை அரசு சோதித்துப் பார்க்க வேண்டாம். அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தயங்கியதால், சமூகத்தினர் தங்கள் போராட்டத்தை மாநிலத் தலைநகருக்குத் தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசாங்கம் மறுத்தால், நாங்கள் நீதிமன்றங்களை நாடுவோம்" என்று கூறிய அவர், தனது ஆதரவாளர்கள் அமைதியாக இருக்கவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், பங்கேற்பாளர்கள் பகலில் மட்டும் ஆசாத் மைதானத்தில் நடைபெறும் போராட்டங்களில் கலந்து கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நான் என் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனால் இந்த முறை, நீதி இல்லாமல் நாங்கள் மும்பையைவிட்டு வெளியேற மாட்டோம்.
மனோஜ் ஜராங்கே

ஆனால், இந்தப் போராட்டத்திற்கு போலீசார் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், அது இன்றுமுதல் 40,000 வரை உயரக்கூடும் எனக் காவல் துறையினர் மதிப்பிட்டுள்ளனர். இதையடுத்து, 1,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், இந்தப் போராட்டத்தால் பேருந்துச் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த போராட்டம் மகாராஷ்டிராவில் மீண்டும் ஒரு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய மாகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மராத்தா இடஒதுக்கீடு பிரச்னைக்கு தங்கள் அரசு ஏற்கனவே தீர்வு கண்டுவிட்டதாக கூறியுள்ளார். மேலும், மராத்தா போராட்டத்திற்கு நீதிமன்றமே கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாகவும், இதில் அரசின் பங்கு எதுவும் இல்லை என்றும் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.