இந்தியா

“மனைவி ருசியாக சமைக்கவில்லை;விவாகரத்து கொடுங்கள்!”

“மனைவி ருசியாக சமைக்கவில்லை;விவாகரத்து கொடுங்கள்!”

webteam

மனைவி ருசியாக சமைக்காததால் விவாகரத்து கேட்டவரின் மனுவை மும்பை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

மும்பை குடும்ப நல நீதிமன்றத்தில், சாந்தாகுரூஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று தருமாறு மனுத்தாக்கல் செய்தார். அம்மனுவில், எனது மனைவி ருசியாக சமைப்பதில்லை, காலையில் நீண்ட நேரம் தூங்குகிறாள். காலையில் தூங்கும்  மனைவி  எனது பெற்றோர் எழுப்ப முயன்றால் வசைப்பாடுவதாகவும். அலுவலகம் முடிந்து  6 மணிக்கு வந்தால் 8.30 மணி வரை தூங்குகிறாள் அதன்பின்னரே இரவு உணவை சமைக்கிறாள். வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் இதர பொருட்களை கூட வாங்க செல்வதில்லை வயதான எனது பெற்றோரே அத்தனை பணிகளையும் செய்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கணவர் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். தான் பணிக்குச் செல்வதற்கு முன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தேவையானவற்றை செய்து விட்டுதான் செல்வதாக தெரிவித்தார். மேலும் அந்தப்பெண்ணின் தரப்பில் வந்த சாட்சிகளும் அவரது கணவரின் குற்றச்சாட்டை மறுத்தனர். நாங்கள் எப்போது வீட்டிற்குச் சென்றாலும் இந்தப்பெண் குடும்ப பணிகளில் மும்முரமாக இருப்பார் எனத் தெரிவித்தனர்.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், ருசியாக சமைக்காதது, காலையில் தூங்குவது எல்லாம் சட்டத்தின் பார்வையில் கொடூரமானதாகக் கருதமுடியாது. இதன் காரணமாக இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்தார்.