இந்தியா

தீ விபத்து பகுதியில் முதல்வர் பட்னாவீஸ் ஆய்வு: 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்

rajakannan

மும்பை கமலா மில்ஸ் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை நகரின் லோவர் பேரல் என்ற இடத்தில் உள்ள கமலா மில்ஸ் அடுக்குமாடி கட்டட வளாகத்தில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தில் உள்ள ரெஸ்டாரெண்ட்டில் நள்ளிரவு 12.30 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று தெரியவந்துள்ளது. உயிரிழந்த பெண்கள் அனைவரும் 25 வயதில் இருந்து 35 வயதிற்குட்பட்டவர்கள். தீ விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தீ விபத்து தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உரிய பாதுகாப்பு வழிமுறைகள் செய்யாத ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்து நடந்த இடத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தத் தீ விபத்து குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.எல்.ஏ. கிரித் சோமையா, “தீயணைப்பு துறையினர்  சட்டவிரோதமாக ரெஸ்டாரெண்ட்டுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதேபோல் சுகாதாரத்துறையும் இதுபோன்ற ரெஸ்டாரெண்டுகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியுள்ளது” என்றார்.